Published:Updated:

கன்னியாகுமரி: கஞ்சா விவகாரத்தில் மோதல்! - நண்பரைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேர்

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

வாய்த் தகராறு முற்றியதால், கணேசன் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், நிஷாந்த் உடன் சேர்ந்து ஜேம்ஸ் டவுன் பகுதியிலுள்ள குளத்தில் மணிகண்டன் உடலில் கல்லைக் கட்டி வீசினர்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள ஜேம்ஸ் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி வேலை செய்துவரும் இவர், கஞ்சா போதைப் பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. மேலும், இவர் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சாப் பொட்டலங்கள் விற்பனை செய்தும் வந்திருக்கிறார். மணிகண்டனும் அவரின் நண்பர்கள் சிலரும் தினமும் அதே பகுதியிலுள்ள குளத்தின் கரையில் அமர்ந்து கஞ்சா புகைப்பதும், மது அருந்தி போதை மயக்கத்தில் இருப்பதும் தொடர்கதையாக நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில், மணிகண்டனைக் காணவில்லை எனப் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கஞ்சா பொட்டலங்கள்
கஞ்சா பொட்டலங்கள்
மாதிரி படம்

விசாரணையில், சம்பவத்தன்று மணிகண்டனும், சில நண்பர்களும் சேர்ந்து கஞ்சா போதையில் குளக்கரையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனுடன் இருந்த நண்பர்களைத் தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்கள்மீது சந்தேகம் வலுத்தது. போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கஞ்சாப் பொட்டலத்தை மணிகண்டன் மறைத்துவைத்ததால் அவரை நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது.

சென்னை:`என் மனைவி அசிங்கப்படுத்திவிட்டாள்!' -  தம்பியைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்

மேலும், மணிகண்டனின் உடலில் கல்லைக் கட்டி அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் வீசியதும் விசாரணையில் வெளியே வந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்திலிருந்து கயிறால் கட்டப்பட்ட நிலையில் மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது. அழுகிய நிலையிலிருந்த அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கொலை குறித்து அஞ்சுகிராமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மீட்கப்பட்ட மணிகண்டனின் உடல்
மீட்கப்பட்ட மணிகண்டனின் உடல்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ ஒருவரின் மகன் நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் மணிகண்டனின் நண்பர்கள். மணிகண்டன் கஞ்சாப் பொட்டலங்களை மறைத்துவைத்ததாகக் கூறி நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். வாய்த் தகராறு முற்றியதால், கணேசன் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், நிஷாந்த் உடன் சேர்ந்து ஜேம்ஸ் டவுன் பகுதியிலுள்ள குளத்தில் மணிகண்டன் உடலில் கல்லைக் கட்டி வீசியுள்ளனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு