Published:Updated:

காதலனை சந்திக்கச் சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்! - புகாரை தட்டிக்கழித்த காவலர்கள்

சிந்து ஆர்
ரா.ராம்குமார்

காவலர்களின் செயல்குறித்து உளவுத்துறை தரப்பிலிருந்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போகவே, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாதிரி படம்
மாதிரி படம்

காதலனை சந்திக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவியை வழிமறித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்களை போலீஸார் கைதுசெய்தனர். புகார் கொடுக்கச் சென்ற மாணவியை சமாளித்து அனுப்பிய காவலர்கள்குறித்து உளவுத்துறை சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து, மாணவிக்கு நீதி கிடைத்தது.

கைது செய்யப்பட்ட அபிஷேக்
கைது செய்யப்பட்ட அபிஷேக்
ரா.ராம்குமார்

கன்னியாகுமரியை அடுத்த தென்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் கரும்பாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கம். கடந்த மாதம் 27-ம் தேதி இரவும் இந்த மாணவி தனது இருசக்கரவாகனத்தில் காதலனைச் சந்திக்க கரும்பாட்டூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அந்த மாணவி காதலனை சந்திக்கச் செல்லும் வழியில் ஆண்டிவிளையைச் சேர்ந்த அபிஷேக் ( 21), மணக்குடியைச் சேர்ந்த சகாய ஜீனு (19) ஆகியோர், மாணவியை வழிமறித்துள்ளனர். பின்னர், வலுக்கட்டயமாக அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் சத்தம் கேட்ட காதலன் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தனது காதலியை இருவர் பலாத்காரம் செய்ய முதன்றதைக் கண்டவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இருவரையும் தாக்கியுள்ளார். ஆனால், இரண்டு வாலிபர்களும் காதலனைத் தாக்கி விரட்டிவிட்டு, மீண்டும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதற்கிடையே, மாணவி அவர்களிடம் போராடி தப்பித்து தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இது, வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் வெளியே கூறக் கூடாது என பெற்றோர் மறைத்தனர்.

கைது செய்யப்பட்ட சகாயஜினு
கைது செய்யப்பட்ட சகாயஜினு
ரா.ராம்குமார்

ஆனால், தனக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த பள்ளி மாணவி பெற்றோரிடம் எடுத்துக்கூறி, தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்களோ, இது உன் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக்கூறி புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பினர். இந்தச் சம்பவம் குறித்து அந்தப்பகுதி உளவுத்துறையினர், சென்னை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு முழுத் தகவலையும் அனுப்பினர். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆண்டிவிளையைச் சேர்ந்த அபிஷேக் ( 21), மணக்குடியைச் சேர்ந்த சகாய ஜீனு (19) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், முதலில் வழக்குப்பதிவு செய்யாமல் மாணவியிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.