Published:Updated:

`15 மாத விசாரணை; சிக்கிய 4 பேர்!' - திக்குறிச்சி கோயில் சிலை திருட்டின் அதிர்ச்சிப் பின்னணி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாரம்பர்ய மிக்க ஐம்பொன்னால் ஆன மஹாதேவர் உற்சவ மூர்த்தி வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட ஐம்பொன்  மஹாதேவர் சிலை
மீட்கப்பட்ட ஐம்பொன் மஹாதேவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயம் திக்குறிச்சி மஹாதேவர் கோயில். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாரம்பர்ய மிக்க ஐம்பொன்னால் ஆன மஹாதேவர் உற்சவ மூர்த்தி வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது. மஹாதேவர் உற்சவ மூர்த்தி, வெள்ளி மற்றும் செம்பாலான திருமுகம், திருவாச்சி, நந்தி சிலை உள்ளிட்டவைகளைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கோயிலின் கருவறை பூட்டை உடைத்து சிலர் கொள்ளையடித்தனர். மேலும், காணிக்கை பணம் மற்றும் சில பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

கொள்ளையடிக்கப்பட்ட சிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கேரள மாநிலம் திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியில் வசித்துவரும் ஷாணாவாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஷாணாவாசின் நண்பரான உசேன், அவரின் காதலி சுமிதா ஆகியோருக்கும் இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் கும்பல் குடும்பத்தினர் போன்று கோயிலுக்குச் சென்று நோட்டமிடுவது தெரியவந்துள்ளது. திக்குறிச்சி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வது போன்று சென்றிருக்கிறார்கள். கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என முதலில் நோட்டம் விட்டுள்ளார்கள். கேமரா இல்லாததால் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆள் நடமாட்டம் குறித்தும் தகவல் சேகரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுமிதா
கைது செய்யப்பட்ட சுமிதா

பின்னர் கொள்ளை திட்டம் வகுத்தவர்கள் திக்குறிச்சி கோயிலில் நள்ளிரவு சொகுசுக் காரில் சென்று ஐம்பொன் சிலை, வெள்ளி, பித்தளைப் பொருள்கள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திருவனந்தபுரம் போகும் வழியில் பித்தளைப் பொருள்களை திருவல்லம் ஆற்றில் வீசியுள்ளனர். புரதானம் மிக்க ஐம்பொன் சிலை உள்ளிட்டவைகளை தங்கள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.

பின்னர் பழைமையான, புராதான மிக்க பொருள்களை விற்பனை செய்யும் சதிஷ்பாபு என்பவரிடம் ஐம்பொன் சிவன் சிலை மற்றும் தனியார் கோயிலில் திருடிய மந்திர மூர்த்தி சிலை ஆகியவற்றை பேரம் பேசி விற்பனை செய்துள்ளனர். சதிஷ்பாபு இந்தச் சிலைகளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்வதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.

`பொன்.மாணிக்கவேல் எங்கள் பெயரைக் குறிப்பிடவே இல்லை!' - சிலைகடத்தல் புகாரை மறுக்கும் அமைச்சர்கள்

அந்த சமயத்தில்தான் போலீஸார் விசாரணையில் இறங்கி திருவனந்தபுரத்தில் வைத்து சிலையை மீட்டுள்ளனர். மேலும், சிலைக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஐம்பொன் சிலையை கண்டுபிடித்த தனிப்படை போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.