Published:Updated:

நகைக்கடை கொள்ளையில் சிக்கிய அ.தி.மு.க குமரி மாவட்ட நிர்வாகி!

அ.தி.மு.க இளைஞர் பாசறை மாவட்டப் பொருளாளர் ரமேஷ்குமார்
அ.தி.மு.க இளைஞர் பாசறை மாவட்டப் பொருளாளர் ரமேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வீட்டை ஒட்டியிருந்த நகைக்கடையில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியைச் சேர்ந்த பொன் விஜய், மார்த்தாண்டத்தில் ஜெயஸ்ரீ என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டுக்குள் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த 65 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்த நகைக்கடை சாவியை எடுத்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகைக்கடைக்குச் சென்றனர். நகைக்கடையை சாவி மூலம் திறந்தவர்கள் அங்கிருந்த சுமார் மூன்று கிலோ நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் இந்தக் கொள்ளை நடந்தது.

கொள்ளை நடந்த சி.சி.டி.வி காட்சிகள்
கொள்ளை நடந்த சி.சி.டி.வி காட்சிகள்

இரண்டு நகைக்கடைகளிலும் கொள்ளையடித்த திருடர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையின் பலனாக மார்த்தாண்டம் அருகே உள்ள எஸ்.டி.மாங்காடு புல்லாணிவிளை பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி எட்வின் ஜோஸ், கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

`கேரள தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ரூ.75,000 கொள்ளை!' - விமானப் பயணத்தில் அதிர்ச்சி

எட்வின் ஜோஸிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான 337 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள நகைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அவர். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் ரமேஷ்குமாரிடம் கொள்ளையடித்த நகைகள் இருப்பதாக எட்வின் ஜோஸ் கூறியிருக்கிறார். மேலும் அவருக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருப்பதாக தெரியவந்தது.

அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்குமார்
அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்குமார்

நகைக்கடை கொள்ளை வழக்கில் எட்வின் ஜோஸ் கைதானதும் அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந் நிலையில், மார்த்தாண்டம் அருகே உள்ள பைங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ்குமாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். நகைக் கடை கொள்ளை வழக்கில் ஆளும் அ.தி.மு.க பிரமுகர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு