Published:Updated:

`ரூ. 4000-க்கு போலி இ-பாஸ்!’ - கன்னியாகுமரி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை டிரைவர்

கைது செய்யப்பட்ட டிரைவர் பிரகாஷ்
கைது செய்யப்பட்ட டிரைவர் பிரகாஷ்

இ-பாஸில் இருந்த பார் கோட் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அது போலியாக அச்சடிக்கப்பட்ட பாஸ் எனத் தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். அதிலும் கேரள மாநில எல்லையையொட்டிய மாவட்டங்களில் நுழையும் வாகனங்களும், அதில் பயணிப்பவர்களும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதியில் 24 மணி நேரமும் சோதனை நடைபெற்று வருகிறது. டெம்போ, லாரி போன்ற கனரக வாகனங்களில் பொருள்களுடன் மறைவாக ஆட்களை ஏற்றி வருவதாகப் புகார் எழுந்ததால் டவர் அமைத்து வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்தநிலையில் போலி இ-பாஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் ஆட்களை அழைத்து வந்த சென்னையைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். சென்னையில் பணிபுரிந்துவரும் சுரேஷ் குமார், தன் மனைவியுடன் அங்கு வசித்துவந்தார். இந்த நிலையில் அவரின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் சொந்த ஊரான கன்னியாகுமரி வருவதற்கு முடிவு செய்துள்ளனர்.

போலியாக அச்சடிக்கப்பட்ட இ-பாஸ்
போலியாக அச்சடிக்கப்பட்ட இ-பாஸ்

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல இ-பாஸ் தேவை என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இ-பாஸ் விண்ணப்பிக்க பயணிக்கும் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்டவை தேவை என்பதால் சென்னை சி.ஐ.டி நகர் பகுதியைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை நாடியுள்ளார். கார் ஓட்டுநரான பிரகாஷ் விரைந்து இ-பாஸ் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தனியாக 4,000 ரூபாய் செலவாகும் எனக் கூறுயுள்ளார். அவர் கூறியபடி இ-பாஸுக்காக 4,000 ரூபாய் கொடுத்துள்ளார் சுரேஷ்குமார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பிரகாஷ் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்துக்குச் சென்று போலியாக இ-பாஸ் தயாரித்துள்ளார். அதைக்காட்டி இ-பாஸ் கிடைத்துவிட்டது எனக் கூறி சுரேஷ்குமாரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேருடன் சென்னையிலிருந்து தனது கார் மூலம் கன்னியாகுமரி அழைத்து வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் போலீஸார் அந்த இ-பாஸில் இருந்த பார் கோட் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அது போலியாக அச்சடிக்கப்பட்ட பாஸ் எனத் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இதைத் தொடர்ந்து காரில் வந்த ஸ்ரீஜா மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். போலி பாஸ் தயாரித்து அவர்களை சென்னையில் இருந்து அழைத்து வந்த பிரகாஷ் மீது ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவர்களை அழைத்து வர பிரகாஷ் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இ-பாஸ் தயாரிக்க உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு