Published:Updated:

`இரவு 12 மணிக்குமேல சூடா தோசையும், ஃபீப்பும் எங்க கிடைக்கும்!' - போலீஸாரிடம் வம்பிழுத்த இளைஞர்

கன்னியாகுமரி காவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்த்தரமான பதிவுகளைப் போட்டவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றிவருகின்றனர். அங்கிருந்தபடி போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கும் செயலைச் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட ஜெரூன்
ஃபேஸ்புக் பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட ஜெரூன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்றச் சம்பவ நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், சாலை விழிப்புணர்வு மற்றும் ஆன்லைன் மோசடிக் கும்பல்கள் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் `கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ்' (Kanyakumari district police) என்ற முகநூல் பக்கம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து இந்த முகநூல் பக்கம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த முகநூல் பக்கத்தில் கடந்த சில நாள்களாக சிலர் காவல்துறை குறித்தும், காவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறையின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குமரி மாவட்ட காவல்துறையினர், வல்லுநர்கள் மூலம் அந்த முகநூல் பக்கத்தை மீட்டெடுத்தனர். பின்னர் ஆய்வுசெய்து பார்த்தபோது, சிலர் ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பின்னூட்டமாக பதிவிட்டது தெரியவந்தது.

ஃபேஸ்புக் பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட ஜெரூன்
ஃபேஸ்புக் பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட ஜெரூன்

விசாரணையில் அவதூறு கருத்துகளை பதிவிட்டு போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியவர்கள் குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி ஆகியோர் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் காவல்துறையின் ஃபேஸ்புக் பதிவுகளின் பின்னூட்டத்தில் ,``கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ் சார் ராத்திரி ரெண்டு மணிக்குமேல நல்ல சூடா தோசையும், பீப்பும் கன்னியாகுமரியில எங்க கிடைக்கும்னு அனு டீர் கேக்கச் சொன்னான்" எனவும். போலீஸைப் பற்றி தரக்குறைவாகவும் பதிவிட்டுள்ளனர்.

இந்த நான்கு பேரும் வெளிநாடுகளில் பணியாற்றிவருவதும், அங்கிருந்தபடி போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கும் செயலை செய்ததும் தெரியவந்தது. இன்ஜினீயரான ஜெரூன் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பிரிவினைக் கருத்துகளை வெளியிட்டவர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

`போலி சான்றிதழ் மூலம் போலீஸ் பணி!’ -ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை பயிற்சியாளர்

இந்நிலையில், குவைத்தில் பணிபுரிந்த ஜெரூன் சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளார். இதை அறிந்த தக்கலை போலீஸார் இன்று அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜெரூனை விசாரித்த நீதிபதிகள் அவரைக் கண்டித்து நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், மூன்றுபேர் சொந்த ஊர் திரும்பும்போது அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆயத்தாமாகியுள்ளனர்.