Published:Updated:

`இன்ஸ்டா’ பாலியல் மோசடி; சிக்கிய லேப்டாப்! - ஃபேஸ்புக் மூலம் வேகமெடுக்கும் இன்ஜினீயர் சுஜி வழக்கு

கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி
கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி

காசி என்ற சுஜியின் லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை அன்லாக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த காசி என்ற சுஜி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் பல போலி கணக்குகள் தொடங்கி தன்னைத் தொழிலதிபர், சமூக சேவகர் போன்று காட்டியுள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கு கமென்ட், லைக் போடும் பெண்களைக் குறிவைத்து நட்பு ஏற்படுத்திக்கொள்வார். பின்னர் காதலிப்பதாகக் கூறி உடல் ரீதியாக நெருங்குவார். பின்னர் ஏதாவது காரணங்களைச் சொல்லி பணம் பறிப்பார். கேட்கும்போது பணம் கொடுக்காமல் இருந்தால் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறிப்பார். சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருடன் இதுபோன்று நெருங்கிப் பழகி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். முதலில் மாமாவின் சிகிச்சைக்குப் பணம் வேண்டும் எனக்கேட்டு, பெண் மருத்துவரிடம் பணம் வாங்கியிருக்கிறார். பின்னர் பலமுறை பணம் வாங்கியவர் ஒருகட்டத்தில் அவரது வங்கிக்கணக்கில் இவரது மொபைல் எண்ணை இணைக்கும் அளவுக்கு நெருங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி
கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி

ஒருமுறை பெண் மருத்துவர் சுஜியின் மொபைலைப் பார்த்தபோது அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததைப் பார்த்துள்ளார். அதுகுறித்து சுஜியிடம் கேட்டதற்கு பிரச்னை செய்து மிரட்டியுள்ளார். மேலும், பெண் மருத்துவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் மருத்துவர், இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்துக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார். எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து காசி என்ற சுஜியைக் கைது செய்தனர்.

மேலும், அவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது தெரிய வந்ததால் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் இந்த வழக்கை விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும், இவரால் ஏமாந்த பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம் என்றும் அவர்களைக் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ``கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி (26). இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி அதில் நன்கு படித்த மற்றும் வசதி படைத்த பெண்களைக் குறி வைத்து நட்பு ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளார். மேலும், நட்பில் உள்ள பெண்களிடம் தனியாகச் சந்தித்து அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துள்ளார். பணம் தேவைப்படும்போது பெண்களைத் தொடர்பு கொண்டு, `உங்கள் புகைப்படங்களை இணையத்தில் பரப்பி விடுவேன்’ என்று மிரட்டி பல லட்சங்கள் பணம் பறித்துள்ளார்.

கன்னியாகுமரி போலீஸின் முகநூல் பதிவு
கன்னியாகுமரி போலீஸின் முகநூல் பதிவு

மேற்கண்ட முறையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாறு போலீஸார் காசியின் மீது u/s 354,354C,354D,385,420 IPC r/w 66A,66E,67 of IT Act படி வழக்கு பதிவு செய்து அவர் பயன்படுத்திய செல்போனைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், காசி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் ஏமாற்றபட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தின் தனிப்பட்ட தொடர்பு எண்ணான `9498111103’ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் ரகசியம் முழுமையாகக் காப்பற்றப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இன்ஸ்டாகிராம் தொழிலதிபர்.. இளம் பெண்களைக் குறிவைத்து மோசடி!’ -யார் இந்த இன்ஜினீயர் சுஜி?

இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தும் ஏ.எஸ்.பி. ஜவகர் கூறுகையில், ``காசி என்ற சுஜியின் லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை அன்லாக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது. மேலும், அவருடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். காசி என்ற சுஜியுடன் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாயத்தில் தங்களை முக்கியமானவர்களாக காட்டிக்கொள்ளும் சிலர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. காசி என்ற சுஜியால் வலையில் வீழ்த்தப்பட்ட பெண்களை அரசியல் பிரமுகர்களும் மிரட்டி ஏமாற்றினார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு