Published:Updated:

`அவர்களை ஜீப்பில் ஏற்றியது ஏன்?!' - கன்னியாகுமரி போலீஸின் செயலால் வைரலாகும் வீடியோ

போதையில் இருந்த அவர்கள், வாகனத்தில் ஏற மறுத்தனர். எனவே அவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டுபேரை தூக்கி ஜீப்பில் ஏற்றும் போலீஸ்
இரண்டுபேரை தூக்கி ஜீப்பில் ஏற்றும் போலீஸ்

போலீஸாருடன் செல்ல மறுக்கும் இரண்டு நபர்களை ஐந்து போலீஸார் அடித்து ஜீப்பில் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 36 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இரண்டுபேர் போலீஸ் ஜீப்பில் ஏற மறுத்து திமிறுகிறார்கள். அப்போது காவலர்கள் அவர்களை லத்தியால் தாக்கியதுடன், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றுகின்றனர்.

போலீஸார்
போலீஸார்

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள், கன்னியாகுமரியில் வாகன சோதனையின்போது போலீஸார் அராஜகம் செய்வதாகவும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சரமாரியாகத் தாக்கி குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு செல்லும் போலீஸார் என்றும் பதிவிடப்பட்டிருந்தனர். ஆனால் வாகன சோதனையின்போது அந்த நிகழ்வு நடக்கவில்லை என்று போலீஸார் மறுத்துள்ளனர்.

மனநலம் பாதித்தவர்களை நெகிழச்செய்த திருச்சி போலீஸார்!

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அந்த வீடியோவில் இருப்பவர்கள் கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச்சேர்ந்த சகாய வால்ட்டர் மற்றும் ராஜசங்கீத தெருவைச் சேர்ந்த ரவீந்திரன். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அருகே பாதுகாப்புப் பணியில் நின்றுகொண்டிருந்த ஏட்டு சங்கரலிங்கத்தைத் தாக்கினர். பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

போலீஸார்
போலீஸார்

இதையடுத்து, போலீஸார் அந்த இரண்டு நபர்களையும் துரத்திச் சென்று பிடித்தனர். போதையில் இருந்த அவர்கள், வாகனத்தில் ஏற மறுத்தனர். எனவே, அவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அந்தப் பகுதியில் கட்டடத்தின் மேல் நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.

`அவர்களை ஜீப்பில் ஏற்றியது ஏன்?!' - கன்னியாகுமரி போலீஸின் செயலால் வைரலாகும் வீடியோ http://bit.ly/2QXolIW

Posted by Junior Vikatan on Wednesday, November 27, 2019