Published:Updated:

`ஊரடங்கால் களைகட்டிய கஞ்சா வியாபாரம்!' -சுற்றிவளைத்த தனிப்படை காவலருக்கு நேர்ந்த சோகம்

கஞ்சா வியாபாரி அஜித்
கஞ்சா வியாபாரி அஜித்

ஏட்டு சிவாஜியின் கையைக் கடித்துவிட்டுத் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது தனிப்படை போலீஸார் சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விநியோகம் நடைபெற்று வந்தது. அதைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்தது. கொரோனா காரணமாக இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மது போதைக்கு அடிமையானவர்கள் சிலர் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றனர். சிலர் மதுபோதைக்குப் பதிலாக கஞ்சா, குட்கா என போதை ஏற்றிக்கொள்கிறார்கள். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கஞ்சா வியாபாரிகள் தங்கள் விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் மறைமுகமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தும் வருகின்றனர்.

காவலருக்குக் கத்திக்குத்து
காவலருக்குக் கத்திக்குத்து

இந்த நிலையில் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில தனிப்படை போலீஸார் ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றபோது பைக்கில் வந்த கஞ்சா வியாபாரிகள் மூன்றுபேரை போலீஸார் சுற்றிவளைத்தனர். இதில் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தன்னைப் பிடிக்க முயன்ற தனிப்படை ஏட்டு வீரமணி மற்றும் சிவாஜியைக் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் ஏட்டு வீரமணிக்குத் தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்தது. ஏட்டு சிவாஜி, கத்தி வைத்திருந்தவரை மடக்கிப் பிடித்தார். இதனால், அவர் ஏட்டு சிவாஜியின் கையைக் கடித்துவிட்டுத் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, தனிப்படை போலீஸார் சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த காவலர்கள் வீரமணி மற்றும் சிவாஜி ஆகியோர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

கத்தி
கத்தி

தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் பெயர் அஜித் (30) என்றும். அவர் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜித்தைக் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 கஞ்சா வியாபாரிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு