Published:Updated:

களியக்காவிளை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் தீவிரவாதிகள்?! - தீவிரமடையும் விசாரணை

தமிழகக் காவல்துறையை அச்சுறுத்தும் விதமாக தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தாக்குதல் சிசிடிவி காட்சிகள்
தாக்குதல் சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று இரவு இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கேரள - தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் இரவுப் பணியில் இருந்த மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வில்சனை முகமூடி அணிந்துவந்த இரண்டுபேர் கைத்துப்பாக்கியால் நான்குமுறை சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வில்சன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தௌஃபீக், சமீம்
தௌஃபீக், சமீம்

இதுகுறித்து இரவு நேரத்திலேயே குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் குமரி மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டும் குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் குற்றவாளிகள் தப்பிச் சென்ற ஸ்கார்பியோ கார் குறித்த தகவல் சிசிடிவி கேமரா மூலம் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. காரின் விவரங்களை வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த 2 பேர்; கைத்துப்பாக்கி! - களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.எஸ்.ஐக்கு நேர்ந்த துயரம்

இதுகுறித்து குமரி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனுக்கு தனிப்பட்ட பகையாளிகள் யாரும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி மற்றும் திருவிதாங்கோடு பகுதிகளில் போலீஸார் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

மேலும், பெங்களூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் என தமிழக காவல் துறை தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, தமிழக காவல்துறையை அச்சுறுத்தும் விதமாக தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட தௌஃபீக் மற்றும் சமீம் ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். விரிவான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" என்றனர்.