Published:Updated:

காவலன் செயலியில் புகார்; 9 நிமிடங்களில் ஸ்பாட்டில் போலீஸ்! - குமரி எஸ்.பி

மீட்கப்பட்ட மொபைல்போனுடன் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்
மீட்கப்பட்ட மொபைல்போனுடன் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

இரவுப் பணியிலிருக்கும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முகநூல் பக்கம் வழியாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களில் பொதுமக்களால் தொலைக்கப்பட்ட 62 செல்போன்கள் காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்டன. அந்த மொபைல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தொலைக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உரியவர்களிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்ரி நாராயணன், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் தொடர்புடைய 45 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 25 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர், ஐந்து ரௌடிகள் என எட்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மொபைல்போன்களை வழங்கும் எஸ்.பி பத்ரி நாராயணன்
மொபைல்போன்களை வழங்கும் எஸ்.பி பத்ரி நாராயணன்

கடந்த ஐந்து மாதங்களில் பொதுமக்களால் தொலைக்கப்பட்ட 62 செல்போன்கள் மீட்டெடுக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இரவு ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது தொடர்பு எண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முகநூல் பக்கம்வழியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இரவு நேரம் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அவசர எண் 100 மற்றும் முகநூலில் வெளியிடப்படும் காவல் அலுவலர்களின் தொடர்பு எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை மேலும் தடுக்க முடியும். தற்போது காவலன் செயலி ஆப் உள்ளிட்டவை மூலம் புகார்கள் பெறப்பட்டுவருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்
செய்தியாளர் சந்திப்பில் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

காவலன் செயலிக்கான கட்டுப்பாட்டு அறை சென்னையில் இருப்பதால், குமரி மாவட்டத்தில் எத்தனை பேர் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. அதேசமயம், காவலன் செயலி உள்ளிட்டவற்றில் புகார்கள் பெறப்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்கின்றனர். இதைவிட வேகமாக ஸ்பாட்டுக்குச் செல்ல முயன்றுவருகிறோம். குற்றச் சம்பவங்கள் இல்லாத குமரி மாவட்டத்தை உருவாக்க இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு