Published:Updated:

`போலீஸ் சுட்டதில் இறந்த பெண்மாவோயிஸ்ட், உங்கள் மகள் அஜிதா!' - தாயைப் பதறவைத்த அழைப்பு

சமூக சேவை அமைப்பில் இணைந்து சேவை செய்வதாக ஒரு முறை வீட்டிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் அஜிதா. கேரளாவில் போலீஸுக்கும் மாவோயிஸ்டுக்கும் ஏற்பட்ட மோதலில் இறந்தது அஜிதா எனத் தெரியவந்துள்ளதாக கியூ பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அஜிதா
அஜிதா

தமிழக - கேரள எல்லையான அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி வனப் பகுதியில் கேரள நக்ஸல் தடுப்பு (தண்டா்போல்டு) போலீஸார் கடந்த மாதம் 28 -ம் தேதி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மாவோயிஸ்ட்டுகள், போலீஸாரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காா்த்தி என்ற கண்ணன், மணிவாசகம், அரவிந்த், ரமா ஆகிய நான்கு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதில் கார்த்தி, மணிவாசகம் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ரமா மற்றும் அரவிந்த் ஆகியோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டது.

அஜிதாவின் தாய் சொர்ணம்
அஜிதாவின் தாய் சொர்ணம்

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சொர்ணம் என்பவருக்குக் கடந்த 9-ம் தேதி ஒரு பெண் போன் செய்துள்ளார். சுய விவரங்களைத் தெரிவிக்காத அந்தப் பெண், ``கேரள மாநிலம் அட்டப்பாடியில் போலீஸுக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் நடந்த மோதலில் கொல்லப்பட்ட பெண் உங்கள் மகள் அஜிதா. எனவே, அங்கு சென்று அடையாளங்களைக் கூறி உடலைப் பெற்றுச்செல்லுங்கள்" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதுகுறித்து தகவல் வெளியானதும் கியூ பிரிவு போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சொர்ணம் கூறுகையில், ``எனக்கு அஜிதா உட்பட மூன்று குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே எனது கணவர் இறந்துவிட்டார். நான் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்தேன். எனது மகள் அஜிதாவை இந்தப் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 12-ம் வகுப்புவரை படிக்க வைத்தார். பின்னர் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.ஏ படித்தார். மேற்படிப்பிற்காக சென்னை சென்றவள், திடீரென பாதியிலே திரும்பிவிட்டாள். அதன்பிறகு சிலர் நிதி உதவி செய்ததால் மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். விடுதியில் தங்கிப்படித்தவள், 2014-ம் ஆண்டு அவ்வப்போது போன் செய்வாள். நாங்கள் அழைப்பதற்கு அவளது மொபைல் எண்ணைக் கேட்டதற்கு அவளிடம் செல்போன் இல்லை என்று கூறினாள். மேலும், `நான் உங்களுக்கு போன் செய்யும்போது பேசினால்போதும்' என்றும் சொல்லுவாள்.

அஜிதா
அஜிதா

ஒருமுறை போன் செய்யும்போது, படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்ப்பதாகச் சொன்னாள். `வேலை பார்ப்பதாக இருந்தால் ஊருக்கு வந்துவிடு' என்று அழைத்தேன். அதற்கு என்னிடம் வாக்குவாதம் செய்தவள், போனை துண்டித்துவிட்டாள். என்ன வேலை பார்த்தாள், எங்கு வேலை பார்த்தாள் என எங்களுக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அவள் எங்களை தொடர்புகொள்ளவே இல்லை. இதற்கிடையில்தான் கடந்த சனிக்கிழமை அந்த போன் வந்தது. திடீரென அவள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போனில் சொன்னதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசு உதவினால் அங்கு சென்று உடலைப் பார்த்து அடையாளம் கூற தயாராக இருக்கிறேன்" என்றார்.

``நடந்தது என்கவுன்டரே அல்ல!"- கொதிக்கும் மாவோயிஸ்ட் 
 சேலம் மணிவாசகத்தின் தங்கை

இதுகுறித்து கியூ பிரிவு போலீஸ் தரப்பில் விசாரித்தோம், ``2012-2013-ம் ஆண்டுகளில் மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அஜிதாவிற்கு மாவோஸ்ட்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் கொள்கையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறார். சமூக சேவை அமைப்பில் இணைந்து சேவை செய்வதாக ஒரு முறை வீட்டிற்கு கடிதம் எழுதியிருக்கிறார் அஜிதா. அதன்பிறகு அவரை யாரும் தேடிச்செல்லவில்லை. இப்போது அட்டப்பாடியில் போலீஸுக்கும் மாவோயிஸ்ட்டுக்கும் ஏற்பட்ட மோதலில் இறந்தது அஜிதா எனத் தெரியவந்துள்ளது.

கேரளத்தின் `தண்டர்போல்ட்' என்கவுன்டர்: யார் இந்த கார்த்தி, மணிவாசகம்?

போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் பெயர்களை இடத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்வதுண்டு. அந்தவகையில், ரமா, அனு, பல்லவி, ஸ்ரீமதி என பல்வேறு பெயர்களை இவர் வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரது உண்மையான பெயர் அஜிதா என்பதே' என்றார்.