Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரி: `வாழ்நாள் முழுவதும் உழைத்த பணம்!’ - பெண்களிடம் நூதன மோசடி; சர்ச்சையில் தம்பதி

பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் போராட்டம்
பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் போராட்டம்

``கொஞ்சம் அதிகமான வட்டிக்கு ஆசைப்பட்டு, நாங்க வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்து நிற்கிறோம்" எனக் கண்ணீர் வடிக்கின்றனர் ஏமாந்த பெண்கள்.

பணமோசடிகள் பலவிதம். அதில் ஒருவிதம்தான் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள கடையாலுமூடு பகுதியில் நடந்திருக்கிறது. வழக்கமாக அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டியும், இரட்டிப்புப் பணம் தருவதாகவும்தான் மோசடி செய்வார்கள். ஆனால், கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியினர், யாராவது மகளின் திருமணத்துக்காக வங்கியில் பணம் போட்டது தெரிந்தால் அவர்களைச் சந்தித்து, `வங்கியைவிட அதிக வட்டி தருவதாகவும், உங்களுக்கு எப்போது பணம் தேவையோ அப்போதே பணத்தைத் திருப்பி தந்துவிடுவோம்’ என எழுதியும் கொடுப்பார்கள்.

கடையாலுமூடு செக்கட்டிவிளை பகுதியைச் சார்ந்த மேரி ஜெயராணி என்பவர், தனது மகளின் திருமணத்துக்காக வங்கியில் பணம் போட்டிருந்தார். அந்தப் பணத்தை ஆகாஷ்- கிறிஸ்டினாள் தம்பதியர் வட்டிக்கு என சில ஆண்டுக்கு முன்னர் வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவரிடம் என 4 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சுமார் 25 பேரிடம் வாங்கியிருக்கிறார்கள். பின்னர், தங்கள் தேவைக்காக பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். இந்தத் தம்பதி மொத்தமாக மோசடி செய்த பணம் ஒரு கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

தீக்குளிக்க முயன்ற பெண்ணை மீட்கும் போலீஸ்
தீக்குளிக்க முயன்ற பெண்ணை மீட்கும் போலீஸ்

பாதிக்கப்பட்ட பெண்கள் சில மாதங்களுக்கு முன்னர் போலீஸில் புகாரளித்துள்ளனர். ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள், நேற்று முதல் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். நேற்று ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியின் வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சில பெண்கள் பணம் கிடைக்காமல் இருந்தால், அங்கேயே தற்கொலை செய்துகொள்வோம் எனக் கூறி மண்ணெண்ணெய் கேனுடன் சென்றிருக்கிறார்கள். இதை அறிந்து போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்றனர்.

போலீஸார் அங்கு சென்று ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியரை அழைத்துப் பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி ஒருவர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீவைக்க முயன்றார். உடனே, போலீஸார் அந்த மூதாட்டியைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர். மேலும், பணம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அந்தப் பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் போராட்டம்
பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் போராட்டம்

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், ``எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கிறிஸ்டினாள் ஏமாற்றிவிட்டார். அவரது வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டால், `உங்களை கோர்ட்டில் சந்திக்கிறேன்’ எனச் சவால் விடுகிறார். கொஞ்சம் அதிகமான வட்டிக்கு ஆசைப்பட்டு , நாங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழந்து நிற்கிறோம்" எனக் கண்ணீர் வடித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு