Published:Updated:

வேலை கிடைத்ததற்கு உயிரே காணிக்கையா... கன்னியாகுமரி இளைஞர் விவகாரத்தில் என்ன நடந்தது?

நவினின் வீடு
நவினின் வீடு

வேலை கிடைக்காததால் உயிரை மாய்க்கும் முட்டாள்தனத்துக்கு நாம் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், வேலை கிடைத்தும் வேண்டுதல் என்ற பெயரில் உயிரை விடுவதை என்னவென்று சொல்வது?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு ஒரு சடலம் கிடப்பதாக நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு அக்டோபர் 30-ம் தேதி சுமார் 11 மணிக்குத் தகவல் கிடைத்தது. ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கினர். இறந்தவரது பாக்கெட்டில் ஆதார் கார்டு, பாஸ்புக் உள்ளிட்டவற்றுடன் ஒரு கடிதமும் இருந்து.

அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள அப்பா, அம்மா... நான் பல காலம் வேலை இல்லாமல் இருந்தேன். அதனால் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. எவ்வளவோ முயன்றும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, வேலை கிடைத்தால் என் உயிரையே காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டினேன். பின் தற்போது பல வருடங்களுக்குப் பின் எனக்கு வேலை கிடைத்தது. எனவே, என் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு கடவுளிடமே நான் செல்கிறேன். இப்படிக்கு சி.நவின்" என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தற்கொலைக்காக எழுதப்பட்டிருந்த காரணத்தைப் பார்த்து விசாரணைக்குச் சென்ற போலீஸாரே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தற்கொலை செய்துகொண்ட நவின்
தற்கொலை செய்துகொண்ட நவின்

நாகர்கோவிலை அடுத்த எள்ளுவிளை, பத்தன்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்லசுவாமி என்பரின் மகனான நவினுக்கு 32 வயது. ரயில்வே போலீஸார் உடலை ஒப்படைத்த அன்றே உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து முடித்திருக்கிறார்கள். கடவுளுக்கு உயிரை காணிக்கை கொடுப்பதாக ஒரு காரணத்தைக் கூறி தற்கொலை செய்துகொண்ட நவின் பற்றி அறிந்துகொள்ள பத்தன்காடு கிராமத்துக்குச் சென்றோம்.

``கோயில்ல எல்லா நிகழ்ச்சிகளையும் முன்ன நின்னு நடத்துவான். ரொம்ப நல்ல பையன். ஆனா, இப்பிடி ஒரு முடிவு எடுப்பான்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கல" என்றார் பத்தன்கோட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

நவினின் உறவினர் ஒருவரிடம் பேசினோம், ``நவின் அப்பா பழவிளை பாலிடெக்னிக்ல வேலை செய்து ரிட்டயர்டு ஆகிட்டார். நவினு பாலிடெக்னிக் படிச்சுட்டு அப்புறமா கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடிச்சு 10 வருஷம் ஆச்சு. வேலைக்காக விண்ணப்பிக்கிறதும், இன்டர்வியூவுக்குப் போறதுமா இருந்தான். ஆனா அரை மார்க், ஒரு மார்க் வித்தியாசத்தில ஃபெயிலாயிரும். ஒருவழியா எக்ஸாம்ல பாஸ் ஆனாலும் நேர்காணல்ல பெயிலாயிரும். அதுக்காக அவன் சோகமா எல்லாம் நடக்கல. நிறைய கூட்டுக்காரங்க உண்டு. தெரிஞ்சவங்கள எங்க பார்த்தாலும் வலிய போய் பேசுவான். இன்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடி `படிக்கலியா?'னு கேட்டா, `எல்லாம் ஏற்கெனவே படிச்சதுதானே...'னு சொல்லுவான்.

கொரோனா லாக்டௌன் தொடங்குறதுக்கு முன்னாடியே மும்பையில உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைக்கு எக்ஸாம் எழுதி பாஸ் ஆனான்.

நவினின் வீடு
நவினின் வீடு

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோவையில நேர்காணலும், மெடிக்கல் டெஸ்ட்டும் முடிஞ்சது. ஒரு வாரத்துக்குள்ள வேலையில ஜாயின் பண்ணுங்கனு, போன மாசம்தான் லெட்டர் வந்தது. எங்க ஏரியாவுல வேற ரெண்டு பேருக்கும்கூட அதே பேங்க்ல வேலை கிடைச்சதுனால, எல்லாரும் சேர்ந்துதான் மும்பைக்குப் போனாங்க. அங்க ஒரு வீடு எடுத்து எல்லாரும் ஒண்ணாத்தான் தங்கியிருந்தாங்க.

போன மாசம் 30-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, ``உங்க பையனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு"னு ரயில்வே போலீஸில இருந்து அவங்க வீட்டுக்குப் போன் வந்தது. அதுக்கு அவங்க, ``எங்க பையன் பாம்பேயில இருக்கான், அவனுக்கு எப்பிடி இங்க ஆக்ஸிடன்ட் ஆகும்?"னு கேட்டிருக்காங்க. போலீஸ் அட்ரஸ், பாஸ்புக் பத்தின விவரங்களைச் சொன்னதும் சந்தேகத்துல, இங்கயிருந்து அவன்கூட வேலைக்குப்போன பசங்களுக்கு போன் பண்ணி கேட்டிருக்காங்க.

அதுக்கு அந்தப் பசங்க, ``ஊருக்குப் போகணும்னு சொன்னான். நாங்கதான் ஃபிளைட்ல டிக்கெட்போட்டு கொடுத்தோம். நேத்தைக்கு சாயங்காலம் 6 மணி வாக்குலதான் கிளம்பிப் போனான். மும்பையில இருந்து சென்னை போய், அங்க இருந்து திருவனந்தபுரத்துக்கு ஃபிளைட்ல போறமாதிரிதான் டிக்கெட் கிடைச்சது"னு சொன்னாங்க.

உடனே பதறியடிச்சுட்டு நாங்க நாகர்கோவிலுக்குப் போனோம். அங்க தலை துண்டான உடம்ப போலீஸ்காரங்க காட்டினாங்க. திருவனந்தபுரத்துல இருந்து பஸ்ல நாகர்கோவிலுக்கு வந்து, அங்க இருந்து புத்தேரி மேம்பாலத்துக்கு அடியில உள்ள தண்டவாளத்தில போய் தற்கொலை செய்திருக்கிறான்.

நவினின் குடும்ப கோயில்
நவினின் குடும்ப கோயில்

அவங்க வீட்டுல மொத்தம் ரெண்டு பசங்க. நவின் தம்பி மெக்கானிக் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு இங்கேயே ஒரு கம்பெனியில வேலைக்குப் போறான். நவினுக்கு கல்யாணத்துக்காகப் பொண்ணு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் தங்குறதுக்கு மும்பையில தனியா வீடு எடுன்னு அவங்க அப்பா சொல்லிக்கிட்டே இருந்தாரு. கல்யாண பேச்சு எடுத்தப்ப, `பொண்ணு வீட்டுல வரதட்சணை கேட்கக்கூடாது'னு மொதல்லயே கண்டிஷன் போட்டான்'' என்று கலங்கியவர்,

``எங்க குடும்பக் கோயிலை புதுசா கட்டி கும்பாபிஷகம் நடத்தி ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. அவன் தினமும் அந்தக் கோயிலுக்குப் போவான். எப்பவும் நண்பர்களோடதான் இருப்பான். ஆனா, அவன் இப்பிடி ஒரு வேண்டுதல் செய்தது யாருக்குமே தெரியாது" என்றார் ஆற்றாமையுடன்.

வேலை கிடைக்காததால் உயிரை மாய்க்கும் முட்டாள்தனத்துக்கு நாம் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், வேலை கிடைத்தும் வேண்டுதல் என்ற பெயரில் உயிரை விடுவதை என்னவென்று சொல்வது?

இளைஞரின் தவறான முடிவு குறித்து, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர், பேராசிரியர் அருள் பிரகாஷ்ஷிடம் பேசினோம். ``வேலைக்காக உயிரை காணிக்கையா தர்றேன்ங்கிறது அறிவுபூர்வமான யோசனையில்லைங்கிறதுகூட அந்தப் பையனுக்குப் புரியலை. அதுக்கு வேலை கிடைக்காமலே இருக்கலாமே. காணிக்கைனா, ஒரு மாசம் அல்லது ஒரு வருஷ சம்பளத்தைக்கூட கொடுக்கலாம். இல்லைன்னா சம்பளத்துல மாசா மாசம் ஒரு பகுதியை கொடுக்கலாம். அதுபோல செய்யுறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க.

டாக்டர் அருள் பிரகாஷ்
டாக்டர் அருள் பிரகாஷ்

என்னதான் பக்தி, நம்பிக்கைன்னாலும், சமுதாயம் ஒத்துக்கொள்ளக்கூடிய, எல்லாருக்கும் பயனுள்ள முடிவுகளை எடுக்கணும். வேலை கிடைச்சா இறைவனுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்யலாம். தற்கொலைங்கிறது எதுக்கும் தீர்வோ முடிவோ கிடையாது. தற்கொலை குடும்பத்துக்கு பெரும் துயரம். தற்கொலை செய்துகிட்டா இறைவன்கிட்ட இடமே கிடையாதுங்கிறது சில மதத்தோட கோட்பாடுல இருக்கு. கடவுள் கொடுத்த உயிரை எடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது. இறைவனுக்கு காணிக்கையா உயிர் கொடுக்கிறது தப்பான சிந்தனை, சட்டப்படி குற்றம்.

மனசுல இருக்கிற தவறான சிந்தனைகள்தான் இதுபோல முடிவு எடுக்கிறதுக்குக் காரணம். துயரமோ, கோபமோ, குற்ற உணர்வோ, குழப்பமோ... மனசுல என்ன சிந்தனை வந்தாலும் நெருக்கமான நாலு பேருகிட்ட ஆலோசிக்கணும். தேவைப்பட்டா மனநல மருத்துவர்கிட்ட போகணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு