Published:Updated:

பாலியல் வழக்கில் தலைமறைவு; தேடப்படும் நபர்! - 24 ஆண்டுகளுக்குப் பின் பிடித்த காரைக்கால் போலீஸ்

தனிப்படை
தனிப்படை

சுதாகர் கேரளாவில் தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்தது.

பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சுதாகர் என்பவர், கடந்த 24 ஆண்டுகளாகக் கேரளாவில் தலைமறைவாக இருந்துவந்துள்ளார். இவரை காரைக்கால் தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சுதாகர்
சுதாகர்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடி, சந்திவெளி தோப்பு பகுதியில் கடந்த 1996- ம் வருடம் பெண் ஒருவர் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் என்பவர் மீது (குற்ற எண் 104/1996 ) 363 மற்றும் 376 IPC குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்தநிலையில் சுதாகர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், கடந்த 24 வருடங்களாக தலைமறைவாகி விட்டார். இதனால் காரைக்கால் மாவட்ட நீதிபதி சுதாகரைத் தேடப்படும் குற்றவாளியாக ஆணை பிறப்பித்து, அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, காரைக்கால் மாவட்ட சீனியர் எஸ்.பி மகேஷ்குமார் பர்ன்வால் உத்தரவின்பேரில், காரைக்கால் வடக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ரகு நாயகம் கண்காணிப்பில் திருநள்ளார் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் மற்றும் எஸ்.டி. எஃப் காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைத்து தலைமறைவான சுதாகரைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுதாகர் கேரளாவில் தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்தது.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

இதையடுத்து, உதவி ஆய்வாளர் பிரவீன் குமார்,சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர்கள் தமிழ் வேலன், சக்திவேல், பாபு பக்கிரிசாமி அடங்கிய தனிப்படையினர் கேரளாவுக்குக் கடந்த 25ம் தேதி விரைந்தனர். அவர்கள், பத்தனம்திட்டா பகுதியில் தலைமறைவாக இருந்த சுதாகரைக் கைது செய்து காரைக்கால் அழைத்து வந்தனர். சுதாகர் இன்று காரைக்கால் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரைக் கைது செய்த தனிப்படையினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு