Published:Updated:

`மேகாலயா பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை!' -போலீஸை மிரளவைத்த காரைக்கால் அரசு ஆய்வக ஊழியர்

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

மிகுந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தர்மராஜை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய நேரத்தில் போலீஸ் பாதுகாப்பிலிருந்து அவர் தப்பித்துச் சென்றார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டருக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆய்வக உதவியாளரைக் கைது செய்த போலீஸார், அவரைக் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பி தலைமறைகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கைதான போது
கைதான போது

மேகாலயா மாநிலத்திலிருந்து, காரைக்காலில் பணி அமர்த்தப்பட்டு மக்களுக்குச் சிறப்பாக சேவை செய்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ, படம் மற்றும் குரல் பதிவுகளைத் தொடர்ந்து பலமுறை அனுப்பி, மருத்துவர் வீடு வரை சென்று பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார் தர்மராஜ். இவர் அந்த மருத்துவர் பணிபுரியும் அதே மருத்துவமனையில் லேப் டெக்னிசியனாகப் பணிபுரிந்து வந்தார்.

தர்மராஜ் மீது கடந்த 27.05.2020 அன்று வழக்கு எண் 203 / 2020 பதிவு செய்த காரைக்கால் நகரக் காவல் அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்யவில்லை. இதனால் கொந்தளித்த பொதுநல அமைப்புகள், தர்மராஜைக் கைது செய்யக் கோரி ஆளுநர் கிரண்பேடி வரை புகார் அளித்தனர். இந்நிலையில் மிகுந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட தர்மராஜை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய நேரத்தில் போலீஸ் பாதுகாப்பிலிருந்து அவர் தப்பித்துச் சென்றார்.

`என்னை எதுக்காக சார் காப்பாத்தினீங்க?' - குடிமகனின் டார்ச்சரால் திணறும் காரைக்கால் இன்ஸ்பெக்டர்

காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் பேசினோம். "விசாரணையில் தர்மராஜ், மருத்துவமனை கொரோனா வார்டிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாகவும் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிற தர்மராஜின் உறவினரான பாபு, பாபுவின் மனைவி மற்றும் காவல்துறையில் உள்ள சிலரின் உதவி பக்கபலமாக இருந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

மீண்டும் தர்மராஜைக் கைது செய்ய இரண்டு பிரிவாகச் சிறப்புக் காவல்துறை படை அமைக்கப்பட்டுள்ளது. தர்மராஜின் வீடு, அவரது மாமனார் வீடு, வெளியூரில் இருக்கிற உறவினர் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், போலீஸாரின் கண்களிலிருந்து தர்மராஜ் தப்பிக்கப் பயன்பட்ட வாகனங்கள், உதவிய நபர்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

தர்மராஜுடன் வேலை பார்க்கிற ஆய்வக உதவியாளர் ஒருவர், திருப்பட்டினம் காந்தி வீதியைச் சேர்ந்த ஆய்வக உதவியாளர் முதலானோருடன் தர்மராஜ் தொடர்பில் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் தர்மராஜ் வேலை பார்த்த அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கிற ரத்தவங்கி அதிகாரி ஒருவர், ரத்தவங்கி ஆய்வகத்தில் பணிபுரியும் ஆண் செவிலியர் இருவரிடமும் தர்மராஜ் வெவ்வேறு சிம்கள், லேண்ட் லைனைப் பயன்படுத்தி தொடர்புகொண்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதுதவிர தர்மராஜ் ரத்தவங்கி ஆய்வக வேலை தவிர, தனியாக ஃபிரிட்ஜ், ஏ சி, வாஷிங்மெஷின் சரிபார்க்கிற பழுதுபார்ப்பு மையத்தையும் நடத்தி வந்ததைக் கண்டுபிடித்துள்ளோம்.

அவரிடம் வேலை பார்க்கிற தொழிலாளர்கள், சேவை பெற்ற வாடிக்கையாளர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இன்னொரு முக்கியத் திருப்பமாக தர்மராஜிடமிருந்து முறைகேடாக ரத்தம் பெற்று பயன்படுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடமும் விசாரணை செய்து வருகிறோம். மேற்படி, அத்தனை நபர்களின் தொலைபேசி தொடர்பு உரையாடல் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஓரிரு தினங்களில் தர்மராஜ் கைது செய்யப்படுவார்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு