Published:Updated:

காரைக்குடி: சொத்து பிரச்னையில் சித்தப்பா கொலை! - தலையுடன் போலீஸில் சரணடைந்த சகோதரர்கள்

கொலை
கொலை ( Representational Image )

கொலை செய்து வெட்டப்பட்ட தலையுடன் சகோதரர்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் சாக்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ளது தைக்கால் தெரு. இந்தப் பகுதியைச் சேர்ந்த யூசுப் ரகுமான் என்பவர் புதுவயல் மெயின் ரோட்டில் கறிக்கடை நடத்திவருகிறார். இவரது இறைச்சிக்கடையில் சிக்கன், மட்டன் விற்பனை அதிகம் நடப்பதால், இரவு நேரம் வரைகூட இவரது இறைச்சிக்கடை இயங்கும் என்கிறார்கள். இந்நிலையில் இவருக்கும் இவருடைய அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துவந்ததாகச் சொல்கிறார்கள்.

கொலை செய்து தலையுடன் கொலையாளி
கொலை செய்து தலையுடன் கொலையாளி

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருக்கும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக இருவருக்குமிடையே பிரச்னை இருந்துவந்திருக்கிறது. சொத்து பிரச்னையால் அண்ணன், தம்பி இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்வதில்லை. குடும்ப விழாக்களில் பார்த்துக்கொண்டால்கூட சண்டை ஏற்படும் என்று நினைத்து, இரு குடும்பத்தினரும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லையாம்; அவற்றைத் தவிர்த்துவிடுவார்களாம்.

இந்நிலையில், நேற்று இரவு சகுபர் அலியின் மகன்களான நியாஸ், ரகுமான் ஆகிய இருவரும் புதுவயல் பகுதியிலுள்ள தங்கள் சித்தப்பா யூசுப் ரகுமான் கறிக்கடைக்கு வந்திருக்கிறார்கள். கோட்டைப்பட்டினத்திலுள்ள சொத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், யூசுப் ரகுமான் அவர்களின் பேச்சுக்குப் பிடிகொடுக்காமல், தனது வேலையைச் செய்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு சித்தப்பா யூசுப் ரகுமான் உடன்படவில்லை என அண்ணன், தம்பி இருவரும் தாங்கள் எடுத்து வந்திருந்த அரிவாளை எடுத்து யூசுப்பைக் கழுத்தில் வெட்டியிருக்கிறார்கள்.

கொலை செய்த அண்ணன் தம்பி
கொலை செய்த அண்ணன் தம்பி

தலையைத் துண்டாக்கி, யூசுப்பைக் கொலை செய்தனர். பிறகு வெட்டப்பட்ட தலையுடன் சகோதரர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சாக்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஆய்வாளர் சுந்தரியிடம் நடத்ததைக் கூறி சாக்குப் பையிலிருந்த தலையை வெளியே எடுத்துக் காண்பித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் சுந்தரி, இருவரையும் கைது செய்தார். யூசுப் ரகுமானின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

காரைக்கால்: `தாயின் இரண்டாவது கணவர் கொலை; 25 ஆண்டுகள் தலைமறைவு!’ - போலீஸில் சிக்கிய நபர்

மேலும், கொலையாளிகளில் ஒருவரான ரகுமானுக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொலை செய்யப்பட்ட நபர்
கொலை செய்யப்பட்ட நபர்

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், விசாரணை குறித்துக் கேட்டறிந்தார். சொத்து பிரச்னைக்காக தனது சித்தப்பாவை அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்தது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு