Published:Updated:

` நிம்மதியாக கேம் ஆட முடியவில்லை!' -`பப்ஜி' விளையாட்டைத் தடுத்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

சத்யா கோபாலன்

`பப்ஜி விளையாடக் கூடாது' எனச் சொன்ன தந்தையை இளைஞர் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

PUBG
PUBG

`Player’s Unknown Battle Ground' என்பதைச் சுருக்கமாக, `PUBG' என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இதுதான், அந்த விளையாட்டின் விதி. அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும்.

PUBG
PUBG

ஸ்மார்ட் போன்களில் பிரபலமான இதற்கு அடிமையாகி, பல இளைஞர்கள் தங்களின் நேரத்தை வீணடித்துவருகின்றனர். இந்த விளையாட்டால் பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் பப்ஜி விளையாடுவதற்காகத் தன் தந்தையையே கொன்றுள்ளார் கர்நாடக வாலிபர் ஒருவர்.

கர்நாடகா மாநிலம் பெல்காம் நகரை சேர்ந்தவர் 21 வயதான ரகுவீர் குமார். அவரின் தந்தை 65 வயதான சங்கர். இவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. பப்ஜி விளையாட்டால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. `எப்போதும் பப்ஜியே விளையாடிக்கொண்டிருக்கக் கூடாது’ என மகன் ரகுவீரை சத்தம்போட்டு வந்துள்ளார். இதுதான் அவரது உயிருக்கு ஆபத்தாகியுள்ளது.

Murder
Murder

நேற்று முன்தினம் இரவு வீட்டில் கேம் விளையாடிக்கொண்டிருந்த ரகுவீருக்கும் தந்தை சங்கருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் விடிய விடிய கேம் விளையாடியுள்ளார் ரகுவீர். நேற்று அதிகாலை 5 மணிக்கு, தன் மகன் தொடர்ந்து கேம் விளையாடுவதைக் கவனித்த தந்தை, அவரிடமிருந்து போனை பிடுங்கி இணையத் தொடர்பை துண்டித்துள்ளார். இதில் கடுப்பான ரகுவீர் தந்தையைத் தாக்கியுள்ளார்.

`7 மணி நேரம் பப்ஜி விளையாடுவான்!’ - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்

பின்னர், தன் குடும்பத்தினரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் காலையும் தனியாக வெட்டியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் ரகுவீரை கைது செய்துள்ளனர். பின்னர், அவரிடம் நடந்த விசாரணையில், நிம்மதியாக விளையாடவே தந்தையைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

crime
crime

இதே போன்ற மற்றுமொரு சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் நடந்துள்ளது. 15 வயதுச் சிறுவன் தன் 19 வயது அண்ணனைக் கொலை செய்துள்ளான். தன் போனில் பப்ஜி விளையாடக் கூடாது என அண்ணன் முகமது ஷேக், கூறியதால் கோபமடைந்த தம்பி இவ்வாறு செய்துள்ளார்.