Published:Updated:

சட்டையில் ரத்தக்கறை... கையில் வெட்டுக்கத்தி... போலீஸாரைக் கலங்கடித்த 29 வயது இளைஞர்!

Murder
Murder

10 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி இருக்கும்போதே நாராயணம்மா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார் தட்டப்பா.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான அனேகல் காவல்நிலையத்துக்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்தார். கையில் வெட்டுக்கத்தியுடனும் சட்டையில் ரத்தக்கறையுடனும் வந்த அவரைப் பார்த்து பதறிய போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாரை அதிரவைத்துள்ளார் அந்த இளைஞர். அனேகலை அடுத்துள்ள பிதராகுப்பே கிராமத்தைச் சேர்ந்த டி மகேஷ் கவுடா என்பவர் அந்த இளைஞர். 29 வயதாகும் இவர், இவரின் தந்தை தட்டப்பாவுடன் வசித்துவந்துள்ளார். தட்டப்பாவின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவியின் மகன்தான் இந்த மகேஷ் கவுடா.

crime
crime

10 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி இருக்கும்போதே நாராயணம்மா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார் தட்டப்பா. அதனால் அப்போதே அவரது முதல் மனைவி அவரிடமிருந்து விலகியுள்ளார். அதிலிருந்து மகேஷுக்கும் நாராயணம்மாவுக்கும் பிரச்னை எழுந்துவந்துள்ளது. இதற்கிடையே, சில நாள்களுக்குமுன்பு மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. தட்டப்பாவுக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதை நாராயணம்மா தனது பெயரில் எழுதிவாங்கிட அதைக் கேட்டு மகேஷ் சண்டையிட்டுள்ளார். அப்போதே இந்த விவகாரம் தாசில்தார் வரைச் சென்றுள்ளது. பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

நிலத்துக்குப் பதிலாக ரூ.7 லட்சம் கொடுக்க வேண்டும் என மகேஷ் டிமாண்ட் வைக்க அதைக் கொடுக்க மறுத்துள்ளார் நாராயணம்மா. மாறாக, ரூ.1 லட்சம் மட்டுமே கொடுப்பேன்; அதற்கு மேல் கிடையாது என்று விவாதம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டீலிங்குக்கு உடன்படாததால் கோபமடைந்த மகேஷ், சமையலறையில் இருந்த வெட்டுக்கத்தியை எடுத்து நாராயணம்மாவின் தலையைத் துண்டாக வெட்டி கொலைசெய்துள்ளார். பின்னர் ரத்தக்கறையுடன் நேராக போலீஸில் சரணடைந்துள்ளார்.

murder
murder

இதுதொடர்பாகப் பேசியுள்ள அனேகல் காவல்துறையினர், ``சில வாரங்களுக்கு முன்புதான் நிலத்தை தன்பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார் நாராயணம்மா. அப்போது இருந்தே இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. நேற்று வாக்குவாதம் முற்றவே, அவரைக் கொலை செய்துவிட்டு போலீஸில் சரணடைந்துள்ளார் மகேஷ். தற்போது அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு