`தாயின் தவறான பழக்கம்; குடும்பத்தைப் பழிதீர்த்த நபர்’- நால்வர் மரணத்தில் அவிழ்க்கப்பட்ட மர்மம்

கர்நாடகாவில் நடந்த கொலையில் சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு திருமணமாகி 18 வயதில் மகள் இருக்கிறார். கணவர் பக்கவாதத்தால் முடங்கியதால், அருகில் உள்ள கார்மண்டஸ் ஒன்றில் இவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை 10 மணியளவில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் லட்சுமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். லட்சுமி அவரது மகள் மற்றும் கணவர் மூன்று பேரும் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டு ஹாலில் லட்சுமியும், படுக்கையில் அவரது மகளும் சடலமாக இருந்துள்ளனர். லட்சுமியின் கணவர் சிவராஜ் சேரில் அமர்ந்திருந்த நிலையில் கழுத்தறுக்கப்பட்டு கிடந்தார். மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு மூவரும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீஸார் விசாரணையில் அது வாடகை வீடு என்பது வீட்டு உரிமையாளரான ரங்கதமைய்யா (Rangadhamaiah) மேல்தளத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. ரங்கதமைய்யா தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ரங்கதமைய்யாவை காலையிலிருந்து அந்தப்பகுதியில் பார்க்கவில்லை எனப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மேல்தளத்தில் இருந்த அவரது வீட்டுக்கு போலீஸார் சென்று பார்த்தனர். அங்கு ரங்கதமைய்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். அவரது வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டில் நான்கு பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ரங்கதமைய்யா தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் லட்சுமி வீட்டுக்குச் சென்று வந்தது பதிவாகியிருந்தது. காவல்துறையினரின் விசாரணையில் ரங்கதமைய்யா மூவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``லட்சுமியின் கணவரான சிவராஜ், அந்தப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி அருகில் உள்ள கார்மென்ட்ஸ் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர்களது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.
வீட்டு உரிமையாளரான ரங்கமதைய்யாவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர், தன் இரண்டு குழந்தைகளையும் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார். இந்நிலையில் லட்சுமி - ரங்கமதைய்யா இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் குறித்து அறிந்த சிவராஜ், தன் மனைவி லட்சுமியைக் கண்டித்துள்ளார். கணவன் மற்றும் மகள் இருவரும் கண்டித்ததையடுத்து லட்சுமி ரங்கமதைய்யாவிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து லட்சுமியைத் தொந்தரவு செய்துவந்துள்ளார்

லட்சுமி அவர் விருப்பப்படி நடந்துகொள்ளாததால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மூவரையும் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு திங்கட்கிழமை இரவு லட்சுமியின் வீட்டுக்குச் சென்று, தன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அங்கிருந்து தன் வீட்டுக்குத் திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு, முன்பாக தன் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இந்தக் கொலையில் முதலில் சந்தேகமும் குழப்பமும் இருந்தது. சிசிடிவி கேமராவின் உதவியால் இந்தக் கொலையில் இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன.” என்றனர்.