Published:Updated:

`காலாவதியான பத்திரம்; நில மோசடிப் புகார்!'- சர்ச்சையில் சிக்கிய வி.ஜி.பி பிரதர்ஸ்

வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் 1 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள நிலத்தைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜிபி பிரதர்ஸ்
விஜிபி பிரதர்ஸ்

சென்னையில் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான வி.ஜி.பி பிரதர்ஸ் நிறுவனம், நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வி.ஜி.பி குழுமத்தில் உள்ள மூவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி.ஜி.பி சகோதரர்கள், சென்னையில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்த நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே வி.ஜி.பி சகோதரர்களில் ஒருவரான வி.ஜி.செல்வராஜின் மகன் வினோத் ராஜுக்குச் சொந்தமான நிலத்தை வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

``அஞ்சலியை மேடம்னு கூப்பிடாததுக்கு ஜெய் என்ன பண்ணார் தெரியுமா?'' - புலம்பும் `போஸ்டர்' நந்தகுமார்!

குடும்பச் சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பி.எம்.கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் வி.ஜி.எஸ் வினோத்துக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காலாவதியான பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.

விஜிபி பிரதர்ஸ்
விஜிபி பிரதர்ஸ்

இந்தப் புகாரின் அடிப்படையில் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை சைதாப்பேட்டையின் உள்ள வி.ஜி.பி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டோம். ``இதுபற்றி நாங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது. அப்படிக் கூறினால் எங்களுக்குத்தான் தேவையற்ற சிக்கல் ஏற்படும்" என்றதோடு முடித்துக் கொண்டனர்.

நில மோசடி புகார் தொடர்பாக, வி.ஜி.பி நிறுவனத்தார், உரிய விளக்கம் அளித்தால் தகுந்த பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.