Published:Updated:

`பைக்கில் ஏற அடம்பிடித்தான்!’ - கரூரில் தாய், தந்தை கண்முன்னரே கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை

பட்டப்பகலில் பெற்றோரின் கண்முன்னாலேயே ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி ஆற்றின் கரையில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தையை, பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் கடத்திக்கொண்டு சென்ற சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கடத்தப்பட்ட மிதுன்
கடத்தப்பட்ட மிதுன்
Vikatan

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே இருக்கிறது, பாலத்துறை. இந்த கிராமத்தில் உள்ள செல்லப்பகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக். இவரது மனைவி, விஜயலெட்சுமி. இந்தத் தம்பதிக்கு மிதுன் (வயது 2) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அங்கு விஜயலெட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்தார். கார்த்திக் தனது குழந்தைகளுடன் கரையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் டிப் டாப்பாக உடை அணிந்துகொண்டு மர்மநபர் ஒருவர் வந்தார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

பின்னர், கார்த்திக் மற்றும் விஜயலெட்சுமியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். தங்களுக்குத் தெரியாத நபர் என்றாலும், தங்களிடம் பேசியதால் அதற்கு அந்த நபருக்கு அந்த தம்பதி பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது, மிதுன் டிப் டாப் ஆசாமி வந்த மோட்டார் சைக்கிளில் ஏற வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். இதற்கு மிதுனின் தாய் விஜயலெட்சுமி மறுப்பு தெரிவித்தார்.

மிதுன் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஏற வேண்டும் என்று அடம்பிடிக்க, வேறுவழியில்லாமல் விஜயலெட்சுமி மிதுனை மோட்டார் சைக்கிளில் ஏற அனுமதித்தார். இதனால், மிதுனை அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, காவிரி ஆற்றங்கரையோரத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். கார்த்திக் தனது மகளோடு நிற்க, விஜலெட்சுமி மறுபடியும் துணி துவைக்கும் வேலையில் பிஸியானார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் சுற்றிக்கொண்டிருந்த அந்த மர்ம நபரைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மிதுனின் பெற்றோர், அப்பகுதியில் மகனைத் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மிதுன் கிடைக்கவில்லை.

`இறுதிக்கட்ட பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை.. ஆனாலும் வெற்றி!’- கரூர் நாகனூர் ஊராட்சி நிலவரம்

அதன்பிறகுதான், மிதுனை மோட்டார் சைக்கிளில் வந்த டிப் டாப் ஆசாமி கடத்திச் சென்றது அவர்களுக்குத் தெரியவந்தது. இதனால், விஜயலெட்சுமி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையைக் கடத்திச் சென்ற மர்ம ஆசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெற்றோரின் கண்முன்னாலேயே ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.