Published:Updated:

`நள்ளிரவில் சேவல்களைத் திருடிய மர்ம நபர்கள்!' - தடுத்த அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்

காயமடைந்த வேணுகோபால்
காயமடைந்த வேணுகோபால்

அவர் கட்டுசேவல் வளர்க்கும் இடத்திற்கு நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 க்கும் மேற்பட்டவர்கள், அங்கே இருந்த சேவல்களைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.

நள்ளிரவில், தான் வளர்த்த சேவல்களைத் திருட வந்த கும்பலை தடுத்த அ.தி.மு.க பிரமுகரை, அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், வேணுகோபால். இவர் பழையஜெயங்கொண்டம் அ.தி.மு.க பேரூர் செயலாளராக இருக்கிறார்.

அதோடு, வேணுகோபால் தனது வீட்டருகே கட்டுசேவல்கள் வளர்த்து வருகிறார். அவற்றை பராமரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் அநேக நேரத்தைச் செலவழிப்பார். இந்நிலையில், அவர் கட்டுசேவல் வளர்க்கும் இடத்திற்கு நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 க்கும் மேற்பட்டவர்கள், அங்கே இருந்த கட்டுசேவல்களைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.

வேணுகோபால் வீட்டில்...
வேணுகோபால் வீட்டில்...

பத்துப் பேரை பார்த்ததில் அங்கே இருந்த நாய்கள் குரைத்ததால், வேணுகோபால் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர்களைத் துரத்தியுள்ளார். `எங்களை துரத்தினா உங்களை வெட்டி சாய்ச்சிருவோம். ஒழுங்கா மரியாதையா, பின்தொடராம திரும்பிப் போய்விடு' என்று எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கிறார்கள்.

Vikatan

ஆனால், வேணுகோபால்,`நான் வளர்த்த சேவல்களை கொடுத்துவிட்டுப் போங்க. இல்லைன்னா நடக்குறதே வேற' என்று சொல்லியபடி, பின்தொடர்ந்திருக்கிறார். இதனால், கோபமான அந்த பத்துப் பேர் கொண்ட கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வேணுகோபாலை வெட்டிவிட்டு, சேவல்களுடன் தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த வேணுகோபால், தடுமாறி கீழே விழுந்தார். இதற்குள் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்களும், வேணுகோபாலின் உறவினர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காயமடைந்த வேணுகோபால்
காயமடைந்த வேணுகோபால்

அந்த மர்மக் கும்பல் வெட்டியதில் காயமடைந்து பரிதவித்த வேணுகோபாலை, அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து, வேணுகோபால் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா நேரில் வந்து, விசாரணை நடத்தினார். அதோடு, இந்த வழக்கில் லாலாபேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகிக்கு, சேவல் கொள்ளைபோன சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம், பழையஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு