Published:Updated:

அவ நல்லவம்மா! - கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்! - நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க!

கரூர் ஆணவக்கொலை
பிரீமியம் ஸ்டோரி
கரூர் ஆணவக்கொலை

- கரூர் ஆணவக்கொலை பயங்கரம்!

அவ நல்லவம்மா! - கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்! - நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க!

- கரூர் ஆணவக்கொலை பயங்கரம்!

Published:Updated:
கரூர் ஆணவக்கொலை
பிரீமியம் ஸ்டோரி
கரூர் ஆணவக்கொலை

தங்கள் மகளைக் காதலித்த மாற்றுச்சாதி இளைஞர் ஒருவரை, ஒரு குடும்பமே சேர்ந்து பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் போட்டுக் கொடூரமாகத் தாக்கி ஆணவக்கொலை செய்திருக்கும் சம்பவம், கரூர் மக்களை அதிரவைத்திருக்கிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த ஆணவக்கொலையை, உணர்ச்சி வேகத்தில் செய்த கொலையாகக் காவல்துறை மாற்றப் பார்ப்பதாகப் பகீர் புகார் கிளம்பியிருக்கிறது!

அவ நல்லவம்மா! - கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்! -  நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க!

கரூர் நகரப் பகுதியிலுள்ள காமராஜர் நகர், தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராமின் மகன் ஹரிஹரன், அதே பகுதியில் சலூன் நடத்திவந்தார். அருகிலுள்ள கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த வேலன் என்பவரின் மகள், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. இரண்டு ஆண்டுகளாக ஹரிஹரனும் அந்தப் பெண்ணும் காதலித்துவந்திருக்கிறார்கள். ஹரிஹரன் வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வேலனின் உறவினர்களால் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும், நகரின் முக்கியக் கோயிலான கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பே, கரூர் நகரக் காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே இந்தக் கொலை நடந்திருப்பது மக்களைப் பதைபதைக்கவைத்திருக்கிறது.

சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்ன விஷயங்களை, மிகையில்லாமல் தொகுத்துச் சம்பவத்தை விவரித்திருக்கிறோம். ‘‘ஹரிஹரனைத் தீர்த்துக்கட்ட முடிவுசெஞ்ச வேலன் குடும்பத்தினர், கூலியாட்களையும் இதுல சேர்த்துகிட்டிருக்காங்க. ஹரிஹரன் காதலிச்ச பொண்ணு மூலமே அவனுக்குப் போன் செஞ்சு, பசுபதீஸ்வரர் கோயில் பின்னாடி வரச் சொல்லியிருக்காங்க. ஹரிஹரனும் ரெண்டு நண்பர்களோட அங்கே வந்திருக்காரு. அங்கே மறைஞ்சிருந்த வேலன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, கூலிப்படையினர்னு பத்துக்கும் மேற்பட்டவங்க, கீழே கிடந்த சிமென்ட் கற்களை எடுத்து தாக்கத் தொடங்கியிருக்காங்க. இதனால, நிலைகுலைஞ்சுபோன ஹரிஹரன், கீழே சரிஞ்சு விழுந்திருக்காரு. இதைப் பார்த்ததும், ஹரிஹரனோட ரெண்டு நண்பர்களும் பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்ல ஓடியிருக்காங்க.

அவ நல்லவம்மா! - கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்! -  நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க!

போலீஸ்காரங்க உடனே அங்கே வந்துட்டாங்க. ஆனா, அதுக்குள்ள அந்தக் கும்பல் ஹரிஹரனைத் தரதரனு இழுத்துக்கிட்டே வந்து கோயில் முன்னாடி போட்டாங்க. அவரைக் கீழே போட்டு காலால உதைக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேர் சிமென்ட் கல்லால ஹரிஹரனோட வயித்துலயே அடிச்சாங்க. அதைப் பார்த்து எங்களுக்கு ஈரக்கொலையே நடுங்கிடுச்சு. ‘எத்தனை பொம்பளப் புள்ளைங்களை இப்படி ஏமாத்துவ?’னு சொல்லிக்கிட்டே ஹரிஹரனை அடிச்சுத் துவைச்சாங்க. ‘என்னை விட்டுருங்க... என்னை விட்டுருங்க’னு ஹரிஹரன் எவ்வளவு கதறியும் அந்தக் கும்பல் கொஞ்சம்கூட இரக்கம் காட்டலை.

தயாரா அங்கிருந்த ஒரு வாகனத்துல ஹரிஹரனைத் தூக்கிப் போட்டுக்கிட்டு, கிழக்குப் பக்கமா போனாங்க. அந்த இடத்துல போலீஸ் இருந்தும் இந்த வன்முறையை அவங்க தடுக்கலை. கொஞ்ச தூரம் போன வாகனத்துலருந்து ஹரிஹரனைக் கீழே தள்ளினாங்க. ஆத்திரம் அடங்கலைபோல, மறுபடியும் ரொட்டுல போட்டுத் தாக்கினாங்க. திரும்பவும் அதே வாகனத்துல ஹரிஹரனை ஏத்திக்கிட்டு

ஜி.ஹெச்சுக்குப் போய், அவசர சிகிச்சைப் பகுதியில, ஒரு ஸ்ட்ரெட்சர்ல கிடத்தித் தள்ளிட்டு ஓடிட்டாங்க. மருத்துவர்கள் பார்த்த பிறகுதான், ஹரிஹரன் முதுகுல கத்தியால ஆழமா குத்தி மாங்கா பிளக்குற மாதிரி பிளந்திருப்பது தெரிஞ்சுது. ஆஸ்பத்திரியில கொஞ்ச நேரத்துலயே ஹரிஹரன் செத்துப்போயிட்டாரு. ஹரிஹரனை அந்தக் கும்பல் அடிச்சு தாக்கினவிதத்தையும், அவர் துடிச்ச துடிப்பையும்போல ஒரு காட்சியை, சினிமாவுலகூட பாக்க முடியாது’’ என்றார்கள் அதிர்ச்சி விலகாமல்.

அவ நல்லவம்மா! - கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்! -  நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க!

மகனை இழந்த துக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்த ஹரிஹரனின் தாய் சித்ராவிடம் பேசினோம். ‘‘இந்தத் தெருவுக்கே செல்லப்பிள்ளையா இருந்தவன்... படுபாவிங்க... நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொன்னுட்டாங்க. என் மகனும், அந்தப் பொண்ணும் ரெண்டு வருஷமாவே காதலிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. ஆனா, எங்களுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரியவந்துச்சு. உடனே பதறிப்போன நான், ‘அது மோசமான குடும்பம். உன் குணத்துக்கும் அழகுக்கும் நல்ல பொண்ணா பாத்து நானே கல்யாணம் பண்ணிவெக்கிறேன். அவளை மறந்திரு’னு சொன்னேன். ஆனா அவன், ‘குடும்பம் மோசம்னாலும், அவ நல்லவம்மா’னு சொன்னான். அந்தப் பொண்ணு வீட்டுக்கும் இந்த விவகாரம் தெரிஞ்சுபோச்சு. என் மகனைக் கூப்புட்டு ரெண்டு தடவை மிரட்டினாங்க. ‘அவனை மறந்துரு’னு அந்தப் பெண்ணையும் மிரட்டியிருக்காங்க. அந்தப் பொண்ணு எனக்கு போன் பண்ணி, ‘கட்டுனா ஹரிஹரனைத்தான் கட்டுவேன்’னு சொன்னா. ‘அதுக்கு உன் குடும்பம் விடாது. என் புள்ள உசுரு எனக்கு முக்கியம். அவனை மறந்துரு’னு நான் சொன்னேன். ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பேசிக்காமத்தான் இருந்தாங்க. என் மகனை அந்தப் பொண்ணு மறக்காம இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்ட வேலன், என் மகனைக் கொல்ல திட்டம் போட்டிருக்கார். நாங்க ஒரு துக்க காரியத்துக்கு வெளியே போயிருந்த நாளா பார்த்து, அந்தப் பொண்ணை போன்ல பேசவெச்சு, என் மகனைக் கோயிலுக்கு வரவழைச்சுக் கொன்னுபுட்டாங்க. இப்படி வாழ வேண்டிய வயசுல அவனை எமனுக்கு வாரிக்கொடுத்துட்டு நிக்கிறோம்’’ என்று கண்ணீர் விட்டார்.

சித்ரா
சித்ரா

ஹரிஹரனின் தந்தை ஜெயராம், ‘‘திட்டம் போட்டு என் மகனைக் கொன்னுட்டு, உணர்ச்சி வேகத்துல நடந்த கொலை மாதிரி போலீஸ் மாத்திட்டாங்க. அந்தப் பொண்ணை மைனர் பொண்ணா காட்ட, பள்ளிச் சிறுமினு சொல்றாங்க. என் மகன் கேரக்டரை தப்பா காட்ட, நிறைய பெண்களோடு தொடர்பு இருந்த மாதிரி சித்திரிக்கிறாங்க. இது எவ்வளவு பெரிய கொடுமை? அன்னிக்கு நான் துக்கக் காரியத்துக்குப் போயிட்டேன். ஆனா, கொலை நடந்த இடத்துல நானும் என் மச்சினனும் இருந்த மாதிரியும், அதை நாகராஜன் என்பவரும், அவரின் மகன் சரவணனும் பார்த்த மாதிரியும் எஃப்.ஐ.ஆர்ல பொய்யா தகவல் பதிவு பண்ணியிருக்காங்க. போலீஸ், வேலன் குடும்பத்தைக் காப்பாத்தப் பார்க்குறாங்க. என் மகனுக்கு நீதி கிடைக்கணும். உண்மை வெளியில் வரணும்’’ என்றார்.

ஹரிஹரனின் நண்பர்கள் சிலர், ‘‘ஹரிஹரனின் காதலியோட உறவுக்காரப் பெண் ஒருவர் இவங்க காதலுக்குத் தூதுவரா இருந்திருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கிட்டு அந்தப் பெண்ணோட கணவர், ஹரிஹரன்கிட்ட நிறைய பணம் கடனா வாங்கியிருக்காரு. அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்கவும்தான், அவர் வேலனைத் தூண்டிவிட்டிருக்காரு. இந்த விஷயத்தைக் காவல்துறை விசாரணைக்கே எடுத்துக்கலை. அதேபோல, கூலிப்படையை எஃப்.ஐ.ஆரில் காட்டினா திட்டமிட்ட ஆணவக்கொலைனு தெரிஞ்சுடும்னு, வேலன் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சு பேரை மட்டும் கேஸ்ல காட்டி, கைது பண்ணியிருக்காங்க. இதுக்குப் பின்னாடி பெரிய தொகை விளையாண்டிருக்கு’’ என்றார்கள்.

ஜெயராம்
ஜெயராம்

கரூர் நகரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியத்திடம் பேசினோம். ‘‘இது சாதாரணமாக நடந்த கொலை. ஆணவக்கொலையோ, திட்டமிட்ட கொலையோ இல்லை. தான் காதலித்த பெண்ணின் உறவுக்காரப் பெண்ணோடும் ஹரிஹரன் தொடர்பில் இருந்திருக்கிறான். அதை அவரின் காதலி கண்டித்திருக்கிறார். அதோடு, பணத்தையும் சில நகைகளையும் அந்தப் பெண்ணிடம் ஹரிஹரன் வாங்கியிருக்கிறான். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியபோதுதான் யதேச்சையாக இந்தக் கொலை நடந்திருக்கிறது. வேலன் உள்ளிட்ட ஐந்து பேரை ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கிறோம். கூலிப்படையெல்லாம் இந்தக் கொலையில் ஈடுபடவில்லை’’ என்றார்.

கரூர் மாவட்ட எஸ்.பி பகலவனிடம் பேசினோம். ‘‘இது, ஆணவக்கொலை எல்லாம் இல்லை. இரு குடும்பத்துக்குள் நடந்த பேச்சுவார்த்தையின்போது நடந்த கொலை. அதேபோல், கொலை நடந்தபோது போலீஸார் அங்கே இல்லை. அந்த இடத்துக்கும் காவல் நிலையத்துக்கும் 500 மீட்டர் தூரம். இது, திட்டமிட்ட கொலையும் கிடையாது. திட்டமிட்ட கொலை என்றால், கையோடு ஆயுதம் கொண்டுவந்திருப்பார்கள். கீழே கிடந்த கற்களாலும் வண்டிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களைக் கிழிக்கப் பயன்படுத்தும் சிறு கத்தியைக் கொண்டும் கொலை செய்திருக்க மாட்டார்கள்’’ என்றார்.

சாதிய வன்மம் தெருவில் ரத்தமாகத் தெறித்ததை ஊரே பார்த்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், காவல்துறையின் நடவடிக்கைமீது முன்வைக்கும் சந்தேகத்துக்கு உரிய விடை கிடைத்தே ஆக வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism