Published:Updated:

புதுக்கோட்டை: பைக் திருட்டு கும்பல்... நள்ளிரவில் பரபர சேஸிங்! - என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பைக் திருட்டு கும்பலை விரட்டிய போலீஸாரைப் பாராட்டிய  எஸ்.பி
பைக் திருட்டு கும்பலை விரட்டிய போலீஸாரைப் பாராட்டிய எஸ்.பி

இரவு நேரமாக இருந்தாலும், சினிமா பாணியில் போலீஸார் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றனர். கிட்டத்தட்ட ஆறு பேரைத் துரத்தியதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் வாகனங்களைப் போட்டுவிட்டு, ஆளை விட்டால் சரி என்று தப்பித்து ஓடிவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் எல்லைக்குள், கரூரைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் ஒன்று இருசக்கர வாகனங்களைத் திருடிக்கொண்டு புதுக்கோட்டை டவுன் நோக்கி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் 19 பேர் கொண்ட அதிரடிப்படையினரைக் களத்தில் இறங்கினார் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன். புதுக்கோட்டைக் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து இரவு ரோந்து அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டு ஏராளமான இடங்களில் வாகனச் சோதனை நடத்தினர்.

பைக் திருட்டு
பைக் திருட்டு

இருசக்கர வாகனத் திருடர்கள் புதுக்கோட்டை வரும் வழியான இலுப்பூரிலும், குழிப்பிறையிலும் இரண்டு இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் உடனே அடுத்தடுத்து தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, போலீஸார் மாலையிடு அருகே அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்ய ஆரம்பித்தனர். இருசக்கர வாகனக் கொள்ளையர்கள் மாலையிடு அருகே வந்தபோது, சோதனை செய்வதற்காக போலீஸார் அவர்களை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், கொள்ளையர்களோ டூவீலரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.

உடனே, சோதனையை நிறுத்திய போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, கொள்ளையர்களைத் துரத்திச் சென்றனர். தனிப்படை போலீஸார் இரவு நேரமாக இருந்தாலும், விடாமல் சினிமா பாணியில் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றனர். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி எல்லை வரையிலும் துரத்திச் சென்ற போலீஸாரின் தொடர் முயற்சியால், கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டூவீலர் கொள்ளையர் போலீஸாரிடம் பிடிபட்டார். கிட்டத்தட்ட ஆறு பேரைத் துரத்தியதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் வாகனங்களைப் போட்டுவிட்டு, ஆளை விட்டால் சரி என்று தப்பித்து ஓடிவிட்டனர்.

பாராட்டும் எஸ்.பி
பாராட்டும் எஸ்.பி

அவர்கள் விட்டுச் சென்ற மூன்று இருசக்கர வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றினர். பிடிபட்ட இருசக்கர வாகனத் திருடன் ஆகாஷ் மீது கரூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகாஷுடன் வந்த மற்றவர்களையும் தனிப்படைப் போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். திருட்டுபோன சில மணி நேரத்துக்குள்ளேயே இரவு நேரமாக இருந்தாலும், கொள்ளையர்களை விரட்டிச் சென்று இருசக்கர வாகனங்களையும், கொள்ளையன் ஒருவரையும் கைது செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டி சான்று வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு