Published:Updated:

மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்திய நபர்! - வீடுவரை துரத்திச் சென்று கைது செய்யவைத்த ஆட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்
தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்

ஆட்சியர் பிரபுசங்கர் தனது உதவியாளரிடம், அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அந்த நபரின் வண்டிச் சாவியை எடுத்துக்கொண்ட ஆட்சியரின் உதவியாளர், இது குறித்து, தான்தோன்றிமலை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

மதுபோதையில் தனது வாகனத்தைத் தாறுமாறாக இயக்கி, சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்திய நபரை, அந்த வழியாக காரில் வந்த கரூர் மாவட்ட ஆட்சியர், அந்த நபரின் வீடு வரைக்கும் துரத்திச் சென்று கைது செய்யவைத்த சம்பவம், மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்
தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்

கரூர் மாவட்ட ஆட்சியராக மருத்துவர் பிரபுசங்கர் பணியாற்றிவருகிறார். தான்தோன்றிமலை தாண்டி வெள்ளியணை செல்லும் வழியில் இருக்கிறது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இந்த நிலையில், கரூர் தான்தோன்றிமலை பகுதியிலிருந்து நேற்று மாலை 5 மணி அளவில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, ஆட்சியர் பிரபுசங்கர் தனது அலுவலக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாகனத்தின் முன்பு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒருவர் தாறுமாறாக வாகனத்தை இயக்கி, சாலையில் சென்றுகொண்டிருந்த மக்களை அச்சமடையவைத்ததாகச் சொல்லப்படுகிறது.

`நானும் போலீஸ்தான்; என்மேல கைவைக்க முடியுமா?!' - போதையுடன் காரை ரோட்டில் நிறுத்தி வம்பிழுத்த காவலர்

பிஸியான அந்த சாலையில் வேகமாகத் தனது வாகனத்தை இயக்கி, அந்த வழியாகச் சென்ற பள்ளி மாணவர்களையும் அந்த நபர் பயமுறுத்தியதாகத் தெரிகிறது. இதை கவனித்த ஆட்சியர் பிரபுசங்கர், அந்த நபரை மடக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நபர் நிற்காமல் செல்ல, ஆட்சியர் வாகனமும் அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்றது. அந்த நபர் தனது வீட்டுக்குச் சென்றுவிட, அவருக்குப் பின்னாலேயே சென்ற ஆட்சியர் வாகனமும் அங்கே சென்று நின்றது.

தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்
தங்கராஜ் வீட்டருகே ஆட்சியர் கார்

அதைக் கண்ட அந்த நபருக்கு, தலைக்கேறிய மதுபோதை சடாரென இறங்கியிருக்கிறது. வடிவேல் பட பாணியில், `இதுக்கு மேல ஓட இடம் இல்லை' என்பதுபோல் விழித்திருக்கிறார். உடனே, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தனது உதவியாளரிடம் கூறி, அந்த நபரைப் பிடித்து கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அந்த நபரின் வண்டிச் சாவியை எடுத்துக்கொண்ட ஆட்சியரின் உதவியாளர், இது குறித்து, தான்தோன்றிமலை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு விரைந்துவந்த தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், குடிபோதையில் தாறுமாறாக வாகனத்தை இயக்கியற்காக, தான்தோன்றிமலையைச் சேர்ந்த தங்கராஜ் என்ற அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு