Published:Updated:

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரசுக் கல்லூரி
அரசுக் கல்லூரி

காவல்துறை, பேராசிரியர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்க செய்யாமல் இழுத்தடிப்பதாக, காவல்துறை அதிகாரியை நீதிபதியே கண்டித்தார்.

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கல்லூரி பேராசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

அரசுக் கல்லூரி
அரசுக் கல்லூரி

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) பேராசிரியராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கல்லூரியில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாணவர்கள் போராட்டத்தின்போது தெரிவித்தனர். ஆனால், முதலில் பேராசிரியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு காரணம், அப்போது கரூரில் பணியாற்றி காவல்துறை அதிகாரி ஒருவர், பேராசிரியரை பாதுகாப்பதாக சொல்லப்பட்டது.

`உங்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தது?’ - கரூர் டி.எஸ்.பியை வறுத்தெடுத்த மாவட்ட நீதிபதி

மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த, வேறு வழியில்லாமல் கடந்த 2019 -ம் ஆண்டு தான்தோன்றிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இளங்கோவன்மீது பாலியல் தொந்தரவு, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, காவல்துறை, பேராசிரியர் மீது குற்றப்பத்திரிகை தாக்க செய்யாமல் இழுத்தடிப்பதாக, காவல்துறை அதிகாரியை நீதிபதியே கடுமையாகக் கண்டித்தார்.

அரசுக் கல்லூரி
அரசுக் கல்லூரி

இந்த விவகாரம் அப்போது விகடன் இணையதளத்தில் செய்தியாக வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று மாலை அளித்த தீர்ப்பில், பேராசிரியர் இளங்கோவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 51 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இப்படி, மாணவர்களின் தீவிரப் போராட்டத்துக்கு பிறகு, இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அங்கு கூடியிருந்த அக்கல்லூரியைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் மாணவ அமைப்பினர், பட்டாசு வெடித்து தீர்ப்பைக் கொண்டாடினர். வழக்கில் தண்டனை உறுதியானதை அடுத்து கல்லூரி பேராசிரியரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு