Published:Updated:

கரூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! - முதியவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

`ஆதாரங்கள் அடிப்படையில் மொத்தம் 25 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1.6 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2,60,000 நிவராணத் தொகை வழங்கவும் வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது!

கரூரில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 25 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1.6 லட்சம் அபராதமும் விதித்து, கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

கரூர்
கரூர்

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (61). இவர், அதே பகுதியில் மாந்திரீகம், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் அருள்வாக்கு சொல்லுதல், சிறப்பு பூஜைகள் நடத்துவது என்று கூறி, ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் பொதுமக்களை வரவழைத்து, பூஜைகள் நடத்திவந்திருக்கிறார். அதோடு, அங்கு வருகை தரும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவதையும் வழக்கமாகக்கொண்டிருந்தாராம்.

பண மோசடி வழக்கு: ஒத்திவைக்கப்பட்ட ஜாமீன் மனு விசாரணை! - முன்னாள் அமைச்சர் தலைமறைவு?!

அப்படி, அவர் நடத்தும் பூஜையில் கலந்துகொண்ட, தங்கள் தந்தைகளை இழந்த மூன்று வெவ்வேறு சிறுமிகளை மட்டும் தனியாக வரவழைத்து, தன்னுடைய வீட்டில் வைத்து பலமுறை சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து, கடந்த 2019 - ம் ஆண்டு வெங்கமேடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளின் உறவினர்கள் தனித்தனியே புகார் அளித்தனர். இது குறித்து, வெங்கமேடு காவல்நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கணபதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கில் 12-ம் தேதியான நேற்று, கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பை அறிவித்தார். அதன்படி, '3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கணபதிக்கு மூன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகார் குறித்து போலீஸார் தாக்கல் செய்த சாட்சியங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் மொத்தம் 25 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1.6 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் பிரித்து வழங்கவும், அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2,60,000 ஆயிரம் நிவராணத் தொகை வழங்கவும் வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு