Published:Updated:

`போக்ஸோ சட்டத்தில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்!’- கரூர் சிறுமி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி

இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் பேபி, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்றக் காவலர் செல்லம்மாள் ஆகியோரை, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் வெகுவாகப் பாராட்டினார்.

குற்றவாளி சரண்யா என்கிற கலைச்செல்வி
குற்றவாளி சரண்யா என்கிற கலைச்செல்வி

இளம்பெண்ணைக் கடத்தி அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பல லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவாளி குமுதவல்லி
குற்றவாளி குமுதவல்லி
Vikatan

கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி (வயது 29). இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபோதை பழக்கம் ஏற்படுத்தியும், அவரை கடத்திச் சென்று திருப்பூரில் அடைத்து வைத்து, தொடர்ந்து கலைச்செல்வி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியில், குமுதவல்லி (வயது 36), கல்பனா (வயது 32), சந்தனமாரி என்கிற சந்தியா (வயது 36), பிரதாப் (வயது 29), சிவகுமார் (வயது 36), மணி (வயது 36) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குற்றவாளி கல்பனா
குற்றவாளி கல்பனா

`கலைச்செல்வி எங்களது மகளை கடத்திக் கொண்டுபோய் வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். நீங்கள்தான் என் மகளை அந்த படுபாதக கும்பலிடமிருந்து மீட்டுத் தரவேண்டும்' என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இது தொடர்பான, வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த, மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா, குற்றச் சம்பவத்தின் முதல் குற்றவாளி சரண்யாவுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், இரண்டு 10 வருடச் சிறைத் தண்டனையும், மேலும் 13 வருடம் சிறைத் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதேபோல், இவ்வழக்கின் 2, 3 மற்றும் 7-ம் எதிரிகள் முறையே குமுதவல்லி, கல்பனா, மணி ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், மேலும் 13 வருடம் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளி சிவக்குமார்
குற்றவாளி சிவக்குமார்

இதே வழக்கில் ஆறாவது குற்றவாளி சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். அதேபோல், இதே வழக்கில் நான்காம் குற்றவாளி சந்தியா என்பவரையும், ஐந்தாம் குற்றவாளி பிரதாப் என்பவரையும் குற்றமற்றவர்கள் என்று இவ்வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஒரே வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பல வருடங்கள் சிறைத் தண்டனையும், பல லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, பரபரப்பு தீர்ப்பு மகிளா விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் ஆறாவது குற்றவாளியான சிவக்குமார் என்பவர் பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளராகச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளி மணி
குற்றவாளி மணி

இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் பேபி, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்றக் காவலர் செல்லம்மாள் ஆகியோரை, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் வெகுவாகப் பாராட்டினார். ஒரே வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பல வருடங்கள் சிறைத் தண்டனை, பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.