கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், கடந்த 2016-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், ஆதியனேந்தலைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் 3-ம் ஆண்டு படித்திருக்கிறார். அப்போது அதே கல்லூரியில் படித்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவரை உதயகுமார் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உதயகுமார் கல்லூரிக்கு அடிக்கடி வராமல் விடுப்பு எடுத்ததால், கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால், உதயகுமாருடன் அந்த மாணவியும் பேசுவதை நிறுத்திவிட்டாராம். அந்த மாணவி பேசவில்லை என்ற ஆத்திரத்தில் உதயகுமார், கடந்த 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ம் தேதி, கல்லூரிச் சீருடையில் அந்த மாணவி படித்துவந்த வகுப்பறைக்குள் நுழைந்து அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கினார். அதில், பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரைக் கைதுசெய்தனர். கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார். கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அந்தத் தொகையைச் செலுத்த தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறையிலிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஆபாசமாகத் திட்டியதற்காக மூன்று மாதங்கள் சிறை, ரூ.1,000 அபராதம், அதைக் கட்டத் தவறினால் மேலும் 15 நாள்கள் சிறை, கட்டையால் தாக்கியதற்காக இரண்டு ஆண்டுச் சிறை, ரூ.1,000 அபராதம், கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை, கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்தார்.
அதேபோல, அபராதத் தொகையான ரூ.23,000-ஐ மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்கவும், பெண்ணின் தாயாருக்கு இழப்பீடு வழங்க இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அரசுக்கு பரிந்துரை செய்யவும் உத்தரவிட்டார்.