Published:Updated:

`ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!'- லஞ்சம் கேட்ட பெண் பி.டி.ஓ-வை சிக்கவைத்த கரூர் இளைஞர்

லஞ்சம்
லஞ்சம்

அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் ரூ. 30,000-த்தை லஞ்சப்பணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் கொடுக்க, அந்த நேரம் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஜெயந்திராணியைக் கையும் லஞ்சமுமாகப் பிடித்தனர்.

வீட்டுமனையை வரன்முறைப்படுத்துவது சம்பந்தமாக மனு அளித்த இளைஞரிடம், பெண் பி.டி.ஓ ஒருவர் ரூ 34,000-த்தை லஞ்சமாகக் கேட்க, அந்த இளைஞர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் அந்தப் பெண் அதிகாரியை வசமாக மாட்டிவிட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவர் கன்னிவாடியில் உள்ள வீட்டு மனையில் புதிதாக வீடு கட்ட நினைத்திருக்கிறார். இதற்காக, தனது வீட்டுமனையை வரன்முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுசம்பந்தமான கோரிக்கை மனுவை, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்துள்ளார். இந்த மனு சம்பந்தமாக விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி, உடனடியாக ரமேஷின் கோரிக்கையை ஏற்று, அவரது வீட்டுமனையை வரன்முறைப்படுத்த முயலவில்லை.

விபத்துக்குள்ளான இனோவா கார்; ரூ.15,000 லஞ்சம் கேட்ட தலைமைக் காவலர்!- வசமாக மாட்டிவிட்ட இளைஞர்

மாறாக, ரமேஷை அலைக்கழித்துள்ளார். ஒருகட்டத்தில் கோபமான ரமேஷ், `ஏன் இப்படிக் காலத்தை இழுக்குறீர்கள். என் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ஏன் தாமதம். என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். உடனே ஜெயந்திராணி, `உன் வீட்டுமனையில் பிரச்னை இருக்கு. ரூ. 34,000-த்தை லஞ்சமாகக் கொடுத்தால், அடுத்த நொடியே உன்னோட வீட்டுமனையை வரன்முறைப்படுத்திவிடுவேன்' என்று சொல்லியிருக்கிறார்.

கைது
கைது
நா.ராஜமுருகன்

ரமேஷோ அந்தப் பணத்தை லஞ்சமாக ஜெயந்திராணிக்கு தர சம்மதிக்கவில்லை. ஆனால் ஜெயந்திராணியோ, `34,000-ல் ஒரு ரூபா குறைந்தால்கூட வேலை நடக்காது. நீ யாரைப் பார்த்தாலும், நான்தான் வேலையை முடிக்கணும். அதனால், எவ்வளவு சீக்கிரம் பணத்தைப் தர்றியோ, அவ்வளவு சீக்கிரத்தில் உனக்கு வேலை நடக்கும்' என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், தனது பிரச்னையைத் தீர்க்க தினமும் ஜெயந்திராணியைப் பார்த்து, `வேலையை முடிச்சுத் தாங்க' என்று கேட்டிருக்கிறார். ஆனால், ரூ.34,000 பணத்தை பெறுவதிலேயே ஜெயந்திராணி குறியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான ரமேஷ், ஜெயந்திராணியை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் வசமாக மாட்டிவிட முடிவெடுத்துள்ளார். அதன்படி ரமேஷ் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம், ஜெயந்திராணி ரூ.34,000 லஞ்சமாகக் கேட்பதைப் பற்றி புகார் தெரிவித்தார்.

கைதான ஜெயந்திராணி
கைதான ஜெயந்திராணி
நா.ராஜமுருகன்

அதனடிப்படையில் இன்று மதியம் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் மாறு வேடத்தில் வந்து காத்திருந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் ரூ. 30,000-த்தை லஞ்சப்பணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் கொடுக்க, அந்த நேரம் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஜெயந்திராணியைக் கையும் லஞ்சமுமாகப் பிடித்தனர். `நான் யார் தெரியுமா?' என்று அவர்களிடம் ஜெயந்திராணி கேட்க, `உங்களைப் பத்தி நல்லாவே தெரியும். அமைதியா இருங்க. இல்லைன்னா, உங்களுக்குதான் அசிங்கமா போயிரும்' என்று கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயந்திராணியை அமைதியாக்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு