Published:Updated:

இன்ஸ்பெக்டருக்கு 10,000, ஏட்டுக்கு 15,000..! - `இனோவா கார்' இளைஞரால் சிக்கிய கரூர் போலீஸ்

இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி
இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி

லஞ்சக் குற்றச்சாட்டில் ஆய்வாளர் வேலுச்சாமியை, திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் விபத்துக்குள்ளான இளைஞர் ஒருவரின் இனோவா காரை விடுவிப்பதற்காக லஞ்சம் கேட்டு, ஏட்டு ஒருவர் கைதான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மீதும் வழக்குப் பாய்ந்து, சஸ்பென்ட் ஆகியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இனோவா கார்
இனோவா கார்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில், கடந்த மாதம் 16-ம் தேதி, இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணிக்கவல்லி என்பவர் இறந்தார். இதுதொடர்பாக, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விபத்துக்குள்ளான இனோவா கார்; ரூ.15,000 லஞ்சம் கேட்ட தலைமைக் காவலர்!- வசமாக மாட்டிவிட்ட இளைஞர்

மாணிக்கவல்லி வந்த கார் மீது மோதிய மற்றொரு காரான இனோவாவை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ராஜசேகரன் என்பவரை, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். ராஜசேகரனை ஜாமீனில் விடுவிக்கவும், தனது இனோவா காரை காவல் நிலையத்திலிருந்து பெறவும் காரின் உரிமையாளரான, சேலம் அபிஷேக் மாறன், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்தார்.

ஏட்டு செந்தில்குமார்
ஏட்டு செந்தில்குமார்

அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார், ரூ.15,000 லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு வார காலம் கரூரில் அறை எடுத்துத் தங்கி, லஞ்சம் வாங்குவதில் செந்தில் குமார் உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அபிஷேக் மாறன், இதுதொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின் பேரில், கடந்த மாதம் 26-ம் தேதி, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம், ரசாயனப் பவுடர் தடவிய ரூ.15,000-த்தை அபிஷேக் மாறன் கொடுக்க, அதை ஏட்டு செந்தில்குமார் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார், செந்தில்குமாரை வளைத்துப் பிடித்து, கைது செய்தனர். மேற்கொண்டு, லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வேறு காவலர்களுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டனர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்
வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்

விசாரணையின் முடிவில், விபத்துக்குள்ளான இனோவா காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்புவதற்காக, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகவும், அபிஷேக் மாறன் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், ஆய்வாளர் வேலுச்சாமி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வேலுச்சாமி மீதான குற்றச்சாட்டுகளை உயரதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அதனடிப்படையில், ஆய்வாளர் வேலுச்சாமியை, திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இளைஞர் ஒருவரின் புகாரால், இரண்டு காவலர்கள் மீது வழக்குப் பாய்ந்திருப்பது கரூர் மாவட்டத்தில் பரபரப்புக் கிளம்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு