Published:Updated:

`செல்போனா உனக்கு சோறு போடுது?' -தந்தை திட்டியதால் தவறான முடிவெடுத்த இளைஞர்

 கரூர் மார்ச்சுவரி
கரூர் மார்ச்சுவரி

வீரபாண்டியன், பொறியியல் படித்த தன் மகன் சூர்யபிரகாஷை தோட்டத்தில் நடக்கும் விவசாய வேலைகளுக்கு ஒத்தாசையாக வரும்படி பலமுறை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

`எந்நேரமும் செல்போனையே நோண்டிக்கிட்டு இருக்கியே, அதுவா உனக்குச் சோறு போடுது. என்னோடு வந்து தோட்டத்துல விவசாய வேலையைப் பாரு' என்று தந்தை அறிவுரை சொல்லி கண்டித்ததால், மனமுடைந்த பொறியியல் படித்த அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடவூர்
கடவூர்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கும் வீரணம்பட்டி ஊராட்சியில் உள்ள சிறிய ஊர், கரிசப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். தனது கிராமத்தில் சொந்தமாக தோட்டம் அமைத்து, அதில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு, 25 வயது நிரம்பிய சூர்யபிரகாஷ் என்ற மகன் உள்ளார்.

இவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். அதுசம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவியதால், தமிழக அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மைலம்பட்டி அரசு மருத்துவமனை
மைலம்பட்டி அரசு மருத்துவமனை

இதன்காரணமாக, சூர்யபிரகாஷ் வேலை தேடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீரபாண்டியன், சூர்யபிரகாஷை தோட்டத்தில் நடக்கும் விவசாய வேலைகளுக்கு தனக்கு ஒத்தாசையாக வரும்படி பலமுறை அழைத்துள்ளார். ஆனால், 'உன்னோடு வந்து வயல்ல இந்த வேகாத வெயில்ல கருகிறதுக்கா நான் இன்ஜினீயரிங் படிச்சேன். அதெல்லாம் வரமுடியாது' என்று மறுத்துப் பேசி வந்துள்ளார். மாறாக, தினமும் தன்னிடம் உள்ள ஸ்மார்ட் போனில் மூழ்கி இருப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தாராம்.

`வேப்பமரம்; தாயின் சேலை!' -குடும்பச் சண்டையால் தற்கொலை முடிவை நாடிய கரூர் பட்டதாரி

இதனால் நொந்துபோன வீரபாண்டியன், 'வயல்ல நான் உழைச்சதுல வந்த காசுலதான் உன்னை இவ்வளவு தூரம் படிக்க வச்சேன். நல்ல சாப்பாடு, துணிமணி எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஆனால், நீ அதை மறந்துட்டு, எந்நேரமும் செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கிறியே. இந்தச் செல்போனா உனக்குச் சோறு போடுது?!' என்று அறிவுரை கூறி, கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமான சூர்யபிரகாஷ், தனது தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். 'வழக்கமாக கோபித்துக் கொண்டு போகிறான். கோபம் தணிஞ்சதும், வீட்டுக்குத் திரும்பி வந்திருவான்' என்று வீரபாண்டியன் சாதாரணமாக நினைத்துக்கொண்டு, வயல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். ஆனால் சூர்யபிரகாஷோ, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று, அரளிவிதையை அரைத்துக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்திருக்கிறார். அங்கே சென்றவர்கள் மூலம் தகவல் கிடைத்ததும், சூர்யபிரகாஷை வீரபாண்டியன் தூக்கிக்கொண்டு, மைலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்.

சிந்தாமணிப்பட்டி காவல் நிலையம்
சிந்தாமணிப்பட்டி காவல் நிலையம்

ஆனால், மூச்சுபேச்சில்லாமல் இருந்த சூர்யபிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்காக சூர்யபிரகாஷின் உடல், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சில தினங்களுக்கு முன், தன் மனைவி தன்னிடம் சண்டை போட்டார் என்பதற்காக, லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொறியியல் படித்த இளைஞர் ஒருவர், தன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவத்தின் சோக வடு மறைவதற்குள், மற்றொரு பொறியியல் படித்த இளைஞர் தனது தந்தை கண்டித்தற்காக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், கடவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு