Published:Updated:

சிக்கவைத்த இளைஞர்; படபடப்பில் திடீர் மரணம் அடைந்த பெண் பி.டி.ஓ! -அதிர்ச்சியில் கரூர் போலீஸ்

பி.டி.ஓ ஜெயந்திராணி
பி.டி.ஓ ஜெயந்திராணி

`தெரியாமல் செய்துவிட்டேன். என்னைவிடுங்கள் சார். இனிமேல் லஞ்சம் வாங்கமாட்டேன்' என்று கெஞ்சியபடி வந்திருக்கிறார்

வீட்டுமனையை வரன்முறைப்படுத்துவது சம்பந்தமாக மனு அளித்த இளைஞரிடம், ரூ 34.000 லஞ்சம் கேட்டு கைதான பெண் பி.டி.ஓ ஜெயந்திராணி மாரடைப்பில் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.டி.ஓ ஜெயந்திராணி
பி.டி.ஓ ஜெயந்திராணி

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ். இளைஞரான இவர், சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். அதோடு, கன்னிவாடியில் உள்ள வீட்டுமனையில் புதிதாக வீடு கட்ட நினைத்திருக்கிறார். இதற்காக, தனது வீட்டுமனையை வரன்முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுசம்பந்தமான கோரிக்கை மனுவை, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்துள்ளார். இந்த மனு சம்பந்தமாக விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி, உடனடியாக ரமேஷின் கோரிக்கையை ஏற்று, அவரது வீட்டுமனையை வரன்முறைப்படுத்த முயற்சி செய்யவில்லை.

`ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!'- லஞ்சம் கேட்ட பெண் பி.டி.ஓ-வை சிக்கவைத்த கரூர் இளைஞர்

மாறாக, ரமேஷை அலைக்கழித்துள்ளார். ஒருகட்டத்தில் கோபமான ரமேஷ், `ஏன் இப்படி காலத்தை இழுக்குறீர்கள்... என் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ஏன் தாமதம், என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். உடனே ஜெயந்திராணி, `உன் வீட்டுமனையில் பிரச்னை இருக்கு. ரூ.34,000 லஞ்சமாகக் கொடுத்தால், அடுத்த நொடியே உன்னோட வீட்டுமனையை வரன்முறைப்படுத்திவிடுவேன்' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ரமேஷோ அந்தப் பணத்தை லஞ்சமாக ஜெயந்திராணிக்குத் தர சம்மதிக்கவில்லை.

கைது
கைது

ஆனால் ஜெயந்திராணியோ, `34,000-ல் ஒரு ரூபா குறைந்தால்கூட வேலை நடக்காது. நீ யாரைப் பார்த்தாலும், நான்தான் வேலையை முடிக்கணும். அதனால், எவ்வளவு சீக்கிரம் பணத்தைப் பிரட்டித் தர்றியோ, அவ்வளவு சீக்கிரத்தில் உனக்கு வேலை நடக்கும்' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம், ஜெயந்திராணி ரூ.34,000 பணத்தை லஞ்சமாகக் கேட்பதைப் பற்றி புகார் தெரிவித்தார்.

அதனடிப்படையில், நேற்று மதியம் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் மாறு வேடத்தில் வந்து காத்திருந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் பணத்தை லஞ்சமாக ஜெயந்திராணியிடம் கொடுக்க, அந்த நேரம் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ஜெயந்திராணியை கையும் களவுமாகப் பிடித்தனர்.

பி.டி.ஓ ஜெயந்திராணி
பி.டி.ஓ ஜெயந்திராணி

அவரை கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், தன்னைக் கைது செய்த நொடியில் இருந்து படபடப்பாக இருந்திருக்கிறார், ஜெயந்திராணி. `தெரியாமல் செய்துவிட்டேன். என்னை விடுங்கள் சார். இனிமேல் லஞ்சம் வாங்கமாட்டேன்' என்று கெஞ்சியபடி வந்திருக்கிறார்.

தான் கைதானதை நினைத்து மனதில் குமைந்துகொண்டிருந்த ஜெயந்திராணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனால், ஜெயந்திராணியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மாரடைப்பில் ஜெயந்திராணி இறந்துவிட்டார். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெண் பி.டி.ஓ ஒருவர் மாரடைப்பில் இறந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு