Election bannerElection banner
Published:Updated:

கரூர்: விஷம், தூக்கு; நள்ளிரவில் இருவர் தற்கொலை! - திருமணம் தாண்டிய உறவு காரணமா?

 தற்கொலை
தற்கொலை ( Representational Image )

திருமணம் தாண்டிய உறவாக, கணவனை இழந்த பெண்ணோடு தொடர்புவைத்திருந்த நபரும், அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம், உறவினர்களை அதிரவைத்திருக்கிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகன் ஆறுமுகம் (வயது 30). இவருக்குத் திருமணமாகி 27 வயதில் மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகம் அந்தப் பகுதியில் மாடு வியாபாரம் செய்துவந்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (வயது 28). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, தனியாக வசித்துவந்தார். இந்தநிலையில், ஆறுமுகத்துக்கும் சிவபாக்கியத்துக்கும் இடையே திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆறுமுகம்
ஆறுமுகம்
நா.ராஜமுருகன்

இதை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி, ஆறுமுகத்தைக் கண்டித்தாகக் கூறப்படுகிறது. இதனால், ஆறுமுகம், சிவபாக்கியம் இருவரும் நேற்று இரவு சந்தித்து, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்காக, கையோடு வாங்கிப் போயிருந்த விஷ மருந்தை உட்கொண்டனர். இதில், சிவபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த ஆறுமுகம், விஷம் குடித்தும் தனக்கு உயிர் போகவில்லை என சிவபாக்கியத்தின் துப்பட்டாவை எடுத்து, அதைத் தனது வேட்டியுடன் இணைத்து, அதைக்கொண்டு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில், ஆறுமுகத்தின் மனைவி கணவர் இரவு வீடு திரும்பாததால், அக்கம்பக்கத்தில் உறவினர்கள் உதவியுடன் தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த வயல்வெளி ஒன்றில் இருவரும் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் உறவினர்கள் தோகைமலை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சிவபாக்கியம்
தற்கொலை செய்துகொண்ட சிவபாக்கியம்
நா.ராஜமுருகன்

அதிகாலை 3 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த இரண்டு பேர் உடல்களையும் மீட்டனர். அதோடு, உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு இருவரின் உடல்களையும் அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு