Published:Updated:

கரூர்: 'வேண்டியபடி திமுக ஆட்சி; வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்!’ - கோயிலில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்

உலகநாதன்
உலகநாதன்

தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில், தீக்குளித்து உயிரை காணிக்கையாகச் செலுத்துவதாக தனக்குத் தானே பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார். இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவந்திருக்கிறார்.

`தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உயிரை மாய்த்துக்கொள்வதாக காளி கோயிலில் வேண்டிக்கொண்ட ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர், கடிதம் எழுதிவைத்துவிட்டு அந்தக் கோயிலில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்காக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனிதா எனபவர், தனது நாக்கை அறுத்து பரமக்குடி முத்தாலம்மன் கோயில் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கரூர் மனிதரின் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகநாதன்
உலகநாதன்

கரூர் மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 60). போக்குவரத்துத்துறையில் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குடும்பத்தினரோடு லாலாபேட்டையில் வசித்துவருகிறார். இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில், தீக்குளித்து உயிரைக் காணிக்கையாகச் செலுத்துவதாகத் தனக்குத் தானே பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார். இது குறித்து, யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவந்திருக்கிறார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைத்ததால், தனது வேண்டுதலால் தான் தி.மு.க ஆட்சி அமைத்து, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ளதால் , புது காளியம்மன் கோயில் கருவறைக்குப் பின்னே தீக்குளித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நல்ல நாள் பார்த்து உலகநாதன் காத்திருந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில், ஆனி அமாவாசையான நேற்று (ஜூலை - 9) கோயிலுக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, உலகநாதன் வெளியே சென்றிருக்கிறார்.

உலகநாதன் எழுதிய கடிதம்
உலகநாதன் எழுதிய கடிதம்

பின்னர், காலை 11 மணி அளவில் மண்மங்கலம் புது காளியம்மன் கோயிலுக்குள், பெட்ரோல் கேனுடன் நுழைந்திருக்கிறார். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கு பணியிலிருந்த கோயில் ஊழியர்கள் தீயை அணைக்கக் கடுமையாக முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சிக்குப் பலனில்லாமல், உடல் முழுவதும் எரிந்து உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அறிந்த, வாங்கல் காவல் நிலைய போலீஸார், உலகநாதன் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு, அங்கிருந்த உலகநாதன் கைப்பட எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி, விசாரணையைத் தொடங்கினர்.

கரூர்: 'பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பா.ஜ.க-வினர்!' - கடுகடுத்த ஆட்சியர்

அவர் எழுதிய கடிதத்தில், 'மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு வணக்கம். சட்டபேரவைத் தேர்தல் அறிவித்தவுடனேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என எண்ணியிருந்தேன். கரூர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். அதாவது, தி.மு.க தனிப்பெரும் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று, ஆட்சி அமைத்து, கரூர் அதிர்ஷ்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றிபெற்று, அன்புத் தம்பி அமைச்சராக வேண்டும் என்று வேண்டினேன். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து பேசியும், மின்வெட்டு குறித்த விளம்பரம் ஆகியவற்றை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பியும் தி.மு.க-வே வெற்றிபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையோடு, பதவி ஏற்றதைp பார்த்த அண்ணியார் துர்கா ஸ்டாலின், ஆனந்தக் கண்ணீர் வடித்ததைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்தநிலையில், ஸ்டாலின் பதவியேற்பு சமயத்தில் கோவிட் - 19 தொற்று, 30,000-க்கும் அதிகமாக இருந்தது. அதனால், தொற்று குறைந்து அனைவரும் நலமடைந்த பிறகு, என் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம் என என் வேண்டுதலை காலதாமதப்படுத்திவிட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டன் உயிர்மூச்சு உள்ளவரை, தி.மு.க ஆட்சி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

உலகநாதன் எழுதிய கடிதம்
உலகநாதன் எழுதிய கடிதம்

நான் காளியின் அருள் பெற்றவன். நான் சொல்வது நடந்துகொண்டேயிருக்கும். நான் செய்த வேண்டுதல் நிறைவேறியதால், சுயநினைவுடன் உயிரிழப்பைத் தேடுகிறேன். மேலும், எனது இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலராக நல்ல முறையில் பணியாற்றிவருகிறான். அவனை கரூர் மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடிப் பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே எனது இறுதி ஆசை. போக்குவரத்துத்துறை நண்பர்கள், அலுவலர்கள், என் உறவினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்குக் கோடான கோடி நன்றியுடன், தங்கள் அடிமட்ட தொண்டன், உலகநாதன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகநாதன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ள புது காளியம்மன் கோயில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வக் கோயில் என்று சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியின் சொந்த ஊரும் அங்கிருந்து 3 கிலோமீட்டரில் வரும் ராமேஸ்வரப்பட்டிதான். இந்தநிலையில், இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட கரூர் மக்கள், 'இதெல்லாம் முட்டாள்தனம். இதுக்காகவெல்லாம் போய் தற்கொலை பண்ணுவார்களா... பாவம், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகள் என்ன பாடுபடுவாங்க?' என்று கூறி, வருத்தப்படுகிறார்கள். தி.மு.க கட்சி வெற்றிபெற்றதற்காக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் - நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்திய பெண்!
அடுத்த கட்டுரைக்கு