Published:Updated:

`டி.ஜி.பி உங்க லைனுக்கு வருவார்!' -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

சரவணக்குமார், ரதி தம்பதி
சரவணக்குமார், ரதி தம்பதி

போலீஸாரின் விசாரணையில், ரதியும் சரவணக்குமாரும் போலி போலீஸ் அதிகாரிகள் என்பது தெரியவந்தது. திருச்சியைச் சேர்ந்த சரவணக்குமாரும் கேரளாவைச் சேர்ந்த ரதியும் தம்பதி.

`நான் திருச்சி கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், என் கணவர் எஸ்.ஐ' என்று பொய்யாக வலம் வந்த கேரளப் பெண் மற்றும் அவரின் கணவரை, கரூர் தான்தோன்றிமலை காவல்நிலைய போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

ரதி
ரதி

கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம், ஜெ.ஜெ கார்டன் சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ். இவர் ஆட்டோ ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், தன் உடல் எடையான 160 கிலோவை குறைக்க வழிதெரியாமல் தவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தான்தோன்றிமலையில் இயங்கிவரும் `மிஸ்டர் அர்னால்டு' என்ற ஜிம்மில், தனது உடல் எடையைக் குறைக்க சென்றிருக்கிறார் சுரேஷ்.

சென்னைக்கு மாற்றலான கரூர் டீன்! - ஓரம்கட்டப்படும் பீலா ராஜேஷ் ஆதரவாளர்கள்

அந்த ஜிம்மை, கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள கீழசக்கரக்கோட்டை அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அங்கே சென்ற சுரேஷ், `என் 160 கிலோ உடல் எடையை 110 கிலோவாக குறைக்க வழிவகை செய்தால், நான் உங்களுக்கு ஒரு பவுன் தங்கச்சங்கிலி தருகிறேன்' என்று ரமேஷிடம் தெரிவித்திருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

அதைத்தொடர்ந்து, ஜிம்மில் தொடர்ந்து சுரேஷுக்கு உடற்பயிற்சிகள் செய்ய உதவியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு, ரமேஷின் செல்போன் கீழே விழுந்து உடைந்துவிட, ரூ.28,000 செலவில் ரமேஷுக்கு புது செல்போன் ஒன்றை வாங்கித் தந்துள்ளார், சுரேஷ். இதனால், சுரேஷிடம் பணம் பறிக்கும் முனைப்போடு தொடர்ந்து ரமேஷ் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதை வைத்து, இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. தொடர்ந்து, தான்தோன்றிமலை அரசுக் கல்லூரி அருகில் நின்றுகொண்டிருந்த சுரேஷிடம், ரமேஷ் பணம் கேட்டு சண்டைப் போட்டுள்ளார்.

சிக்கிய போலி போலீஸ் தம்பதி

இந்த நிலையில், ரமேஷின் ஜிம்மிற்கு ரெகுலராக வரும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட, தான்தோன்றிமலை பகுதியில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள், ரமேஷுக்கு உதவ முன்வந்துள்ளனர். `எங்களுக்கு தெரிந்த காவல்துறையில் பணியாற்றும் தம்பதி இருக்கிறார்கள். அவர்களை வைத்து, சுரேஷிடம் பணத்தை வாங்குங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ரதி மற்றும் அவரின் கணவர் சரவணக்குமார் இருவரும், சுரேஷை மிரட்டி, ரமேஷ் கேட்கும் பணத்தை தரும்படி மிரட்டியுள்ளனர். திருச்சி குற்றப்பிரிவில் தான் ஆய்வாளராகவும், தன் கணவர் சரவணக்குமார் உதவி ஆய்வாளராகவும் இருப்பதாக, சுரேஷிடம் பீலா விட்டுள்ளார், ரதி.

ரதி
ரதி

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுரேஷ், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார், ரதியையும், சரவணக்குமாரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களின் விசாரணையில்தான், ரதியும் சரவணக்குமாரும் போலி போலீஸ் அதிகாரிகள் என்பது தெரிய வந்தது. திருச்சியை சேர்ந்த சரவணக்குமாரும் கேரளாவைச் சேர்ந்த ரதியும் தம்பதி.

`நான் ரகசிய போலீஸ்..!' -சிவகங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த போலி காவலர்; மடக்கிப் பிடித்த காவல்துறை

போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இரண்டு கார்கள், சொந்த வீடு என்று வாழ்ந்து வந்த இவர்கள், போலி போலீஸ் அதிகாரிகளாக நடித்து பலரை ஏமாற்றியதையும் கண்டறிந்தனர். ரதி அச்சு அசலாக போலீஸ் போல் பேண்ட் அணிந்து, கையில் லத்தி வைத்திருந்ததைப் பார்த்து, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸாரே ஒருகணம் கிறுகிறுத்துப் போனார்கள்.

ஆரம்பத்தில், `நாங்க யார் தெரியுமா.. எங்களைக் கைது செய்தால், திருச்சி ஐ.ஜி பேசுவார், அப்புறம் எங்களை விடலன்னா, டி.ஜி.பி-யே உங்க லைனுக்கு வருவார். சம்மதமா?' என்று எகிறியிருக்கிறார், ரதி. ஆனால், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், அவரை தங்கள் பாணியில் கவனிக்க, அதன்பிறகே கப்சிப் என்று அமைதியாகியிருக்கிறார், ரதி.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இவர்கள் இருவரும் போலி போலீஸ் என்பது ஜிம் உரிமையாளர் ரமேஷ், அறிமுகப்படுத்திய அந்த இரண்டு கேரள இளைஞர்கள் என யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. ரதி மற்றும் சரவணக்குமார் இருவர் மீதும், தான்தோன்றிமலை போலீஸார் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள். கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல், வேறு வழக்குக்காக விசாரிக்கப் போன இடத்தில் போலீஸார், இரண்டு போலி போலீஸ் அதிகாரிகளை கைது செய்திருப்பது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு