Published:Updated:

கொல்லப்பட்ட சமூக ஆர்வலர்... ஆதாரவாகப் போராடிய சமூக ஆர்வலர்கள் கைது! - என்ன நடக்கிறது கரூரில்?

சமூக ஆர்வலர்கள் கைது

அனுமதியின்றி இயங்கிவந்த குவாரிக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்லவலர் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்காகப் போராடிய சமூக ஆர்லவர்களை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

கொல்லப்பட்ட சமூக ஆர்வலர்... ஆதாரவாகப் போராடிய சமூக ஆர்வலர்கள் கைது! - என்ன நடக்கிறது கரூரில்?

அனுமதியின்றி இயங்கிவந்த குவாரிக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்லவலர் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்காகப் போராடிய சமூக ஆர்லவர்களை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
சமூக ஆர்வலர்கள் கைது

க.பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பவருக்குச் சொந்தமான அன்னை ப்ளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரிக்கு எதிராகப் போராடிவந்த, அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், பொலேரோ பிக்கப் வாகனம் ஏற்றிக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், சக்திவேல், ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 ஜெகநாதன்
ஜெகநாதன்

இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நிறைவுற்ற பின்பும், ஜெகநாதன் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து அவர் உறவினர்களும், சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிரான கூட்டியக்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம், ஜெகநாதனின் மனைவிக்கு விதவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உத்தரவாதம் தரப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், ஆட்சியரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே, இன்று காலை சாமான்ய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகத்தை தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் திடீரென்று கைதுசெய்திருக்கின்றனர். சண்முகம், இன்று வெளியாகியிருக்கும் ஜூ.வி-யில் குவாரி கொலை சம்பந்தமான விவகாரத்தில் பேட்டி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வகுமார்
செல்வகுமார்

அதேபோல், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடம் முன் காலை 11 மணியளவில் கரூர் டி.எஸ்.பி தேவராஜ் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை, மக்களைப் போராடத் தூண்டிய குற்றத்துக்காகவும், இதனால் ஏற்பட்டிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டியும் கைதுசெய்தனர். இதனால், அங்கிருந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கைதுசெய்யப்பட்ட சண்முகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து, நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலரான இராஜேஸ்கண்ணன், ``அதிகாரிகள் செய்யவேண்டிய வேலையை சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம். எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், குவாரி கும்பல்களால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. இது ஒருபுறமென்றால், மறுபுறம் நியாயமான பிரச்னைக்காக அறவழியில் போராடும் எங்களுக்கு காவல்துறை கைது பயம் காட்டி, வாய்ப்பூட்டுச் சட்டம் போடலாம் எனப் பார்க்கிறது.

இராஜேஸ்கண்ணன்
இராஜேஸ்கண்ணன்

தேர்தலுக்கு முன்பு இங்க பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், 'கரூரில் நடக்கும் இயற்கை சுரண்டலுக்கு எங்க ஆட்சியில் முடிவுரை எழுதுவோம்'னு பேசினார். ஆனால், அவர் ஆட்சியில் சமூக ஆர்வலர் அதை தடுப்பதாக உத்தரவாதம் கொடுத்த நிலையில் கொல்லப்படுகிறார். அதை தடுக்கப் போராடும் சமூக ஆர்வலர்களை கைது பண்றாங்க. இங்க நடப்பது முதல்வருக்கு தெரிந்து நடக்குதா, இல்லை தெரியாமல் நடக்குதா? அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதை கண்டுக்காமல் இருக்கிறார்.

இன்று நாங்க ஜெகநாதன் கொலையில் இருக்கும் மர்மம் பற்றி புகார் கொடுக்க இருந்தோம். ஜெகநாதனுக்கு ஒரு காலே இல்லை. ஆனால், அது இப்போதுதான் எங்களுக்குத் தெரியுது. முன்பே ஜெகநாதனை அடித்துக் கொலைசெய்து, காலை வெட்டி எடுத்துவிட்டு, அதன்பிறகு வாகனத்தில் மோதி விபத்தாக மாற்றப் பார்த்திருக்கிறார்கள். அதனால், ஜெகநாதனின் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே உடற்கூராய்வு மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கத் தயாராக இருந்தோம்.

 சண்முகம் (கைதுசெய்யப்பட்ட சமூக ஆர்வலர்)
சண்முகம் (கைதுசெய்யப்பட்ட சமூக ஆர்வலர்)

அதே போல், கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஜெகநாதன் உடலை வாங்கமாட்டோம் என்று உறுதியாக இருப்பதால், இப்போது சண்முகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களைக் கைது பண்ணியிருக்காங்க. எங்கப் போராட்டம் பெரிதானா, கரூரில் கல்குவாரி என்கிற பெயரில் நடக்கும் முறைகேடுகளும், அதை மறைக்கும் அதிகாரிகளின் வண்டவாளங்களும் மக்கள் முன் தண்டவாளம் ஏறும் என்பதால், அதற்கு பயந்து எங்கப் போராட்டத்தை கைது நடவடிக்கை மூலம் நீர்த்துப் போகச் செய்ய நினைக்குறாங்க. இதனால், எங்கப் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. எங்கப் போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கவே செய்யும்" என்றார்.

இது குறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம். ``அது தனிப்பட்ட விஷயத்துக்காக நடந்த கொலை. அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைதுசெய்துவிட்டோம். ஆனால், அவர்கள் அதற்காக வைக்கும் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றமுடியும்?

சுந்தரவதனம் (கரூர் மாவட்ட எஸ்.பி)
சுந்தரவதனம் (கரூர் மாவட்ட எஸ்.பி)

அதனால்தான், மக்களை தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் போராடத் தூண்டியதாக சண்முகம் உள்ளிட்ட இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை" என்றார்.