Published:Updated:

கரூர்: அரளிவிதையை சாப்பிட போறேன்; ஸ்விட்ச் ஆஃப்! - 1 மணிநேரத்தில் இளம்பெண்ணை மீட்ட போலீஸ்

அந்தக் குடும்பத்தினர்
அந்தக் குடும்பத்தினர் ( நா.ராஜமுருகன் )

'இனி என்ன சண்டை சச்சரவுன்னாலும், தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டேன்'னு அந்தப் பெண் உறுதியா சொல்லிட்டுப் போனார். ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, நிலைகுலைய இருந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றி, கரைசேர்த்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்

குடும்ப பிரச்னை காரணமாகத் தன் கணவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு, தன் இரண்டு குழந்தைகளோடு தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவர், தன் 2 ஆண் குழந்தைகளுடன் அரளி விதையை அரைத்துச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ளபோவதாக அவர் கணவருக்கு போன் மூலம் தகவல் அளித்துவிட்டு, போனை துண்டித்துவிட்டார். இதனால், பதறிப்போன அந்தப் பெண்ணின் கணவர், பலமுறை அந்தப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்துள்ளார். ஆனால், ஸ்விட்ச் ஆஃப் என்றே ரெக்கார்டு டோன் வர, பதறிப்போன அவர், வெங்கமேடு காவல் நிலையத்துக்கு பதறியபடி சென்றிருக்கிறார். அங்கே, தன் மனைவி, இரண்டு குழந்தைகளோடு அரளி விதையை அரைத்துச் சாப்பிட்டுவிட்டு, தற்கொலைக்கு முயல்வதாக போன் மூலம் தெரிவித்ததைச் சொல்ல, காவலர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

அந்தக் குடும்பத்தினர்
அந்தக் குடும்பத்தினர்
நா.ராஜமுருகன்

வெங்கமேடு காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்ட இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு முதல் நிலை காவலர் அனைவரும் சேர்ந்து அப்பகுதியைச் சுற்றி ஆளுக்கு ஓர் இடத்தில் அந்தப் பெண்ணைத் தேடத்தொடங்கினர். அந்தப் பெண்ணின் உறவினர்கள் வீடுகள் அமைந்துள்ள சின்னமநாயக்கன்பட்டி, வெங்கமேடு அரசு காலனி என்று பல இடங்களில் அந்தப் பெண்ணை தேடினர். ஆனால், அங்கெல்லாம் அவர் இல்லாமல் போக, பரபரபப்பு கூடியது.

செல்போன் பயன்பாட்டை வைத்து கண்டுப்பிடிக்கும் முயற்சியும் நடந்தது. அந்தப் பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்ததால், அப்படியும் கண்டுபிடிக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், ஒரு மணி நேரம் கரைய, விடாமல் போலீஸார் அந்தப் பெண்ணை தேடிவந்தனர். ஒருவழியாக அந்தப் பெண்ணின் செல்போன் ஆன் செய்யப்பட, பிறகு அப்பெண்ணின் செல்போன் எண்களை வைத்து டவர் லொகேஷன் கண்டுபிடித்ததில், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள டவரை காட்டியது. அங்கே விரைந்து சென்ற போலீஸார், குளத்துப்பாளையம் பகுதி முழுவதையும் சல்லடைப் போட்டு தேடினர். ஒருவழியாக, ரயில்வே குகைவழிப்பாதை அருகில் உள்ள ஒரு சீமைகருவேலம் மரங்கள் மண்டிக்கிடக்கும் காட்டில், தன் இரண்டு குழந்தைகளுடன் இருந்த அப்பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டனர்.

ரமேஷ் (தலைமை காவலர்)
ரமேஷ் (தலைமை காவலர்)
நா.ராஜமுருகன்

அதுவரை அரளிவிதை எதையும் அவர் சாப்பிடவில்லை. "என் கணவர் என்னைத் தினமும் போட்டு அடிக்கிறார். பொழுது விடிஞ்சா பொழுது போனா ஒரே சண்டைதான். எனக்கு வாழவே பிடிக்கலை. அதனால்தான், பிள்ளைகளோடு செத்துப்போகலாம்னு முடிவு பண்ணி, இங்கே வந்தேன். ஆனால், அரளிவிதையை பறிக்கப்போறப்ப, இந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்த்தேன். எங்க சண்டைக்கு இந்தப் பிஞ்சுகளைக் கொல்லணுமானு தோணுச்சு. அதனால், ஸ்தம்பிச்சு உட்கார்ந்துட்டேன். அதுக்குள்ள நீங்க வந்து என்னைக் கண்டுப்பிடிச்சுட்டீங்க" என்று சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து, பயிற்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணனிடம் பேசினோம். "தேவையான புத்திமதி சொல்லி, அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்து வந்தோம். வாழைப்பழம், பிஸ்கட் வாங்கிக் கொடுத்து, குழந்தைகளை சாப்பிட வைத்தோம். பிறகு, அந்தப் பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் காவல் நிலையத்தில் வைத்து கவுன்சலிங் கொடுத்தோம்.

கிருஷ்ணன் (பயிற்சி உதவி ஆய்வாளர்)
கிருஷ்ணன் (பயிற்சி உதவி ஆய்வாளர்)
நா.ராஜமுருகன்

'இனி என்ன சண்டை சச்சரவுன்னாலும், தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டேன்'னு அந்தப் பெண் உறுதியா சொல்லிட்டுப் போனார். ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, நிலைகுலைய இருந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றி, கரைசேர்த்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என்றார் உணர்ச்சிப் பொங்க!

அடுத்த கட்டுரைக்கு