Published:Updated:

`சாப்பிடப் போகும் நேரம்தான் கணக்கு!' -கரூர் ஹோட்டல்களைப் பதறவைக்கும் இரவு கொள்ளையர்கள்

`பொதுமக்கள் தங்களது கார்களில் பணத்தையோ, விலை உயர்ந்த பொருள்களையோ வைக்க வேண்டாம்' என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

கண்ணாடி உடைத்து திருட்டு
கண்ணாடி உடைத்து திருட்டு

கரூரில் இனோவா காரை நிறுத்திவிட்டு ஒரு குடும்பம் சாப்பிடப் போன நொடியில், கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த இரண்டரை லட்சம் பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிய மர்மக் கும்பலைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

இன்னோவா கார்
இன்னோவா கார்

கரூரில் காரை உடைத்து அடுத்தடுத்து நடக்கும் தொடர் திருட்டுகளால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோயமுத்தூர் திருப்பதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு இனோவா காரில் சென்றுவிட்டு, மறுபடியும் கோயமுத்தூருக்கு திரும்பியிருக்கிறார். அப்போது, கரூர் - கோவை சாலையில் உள்ள பிரபல ஹோட்டல் முன்பு, தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் ஹோட்டலுக்குள் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். அவரது காருக்குள் இரண்டரை லட்சம் ரொக்கம் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருள்களும் இருந்துள்ளன.

கண்ணாடி உடைத்து திருட்டு
கண்ணாடி உடைத்து திருட்டு

குடும்பத்தோடு சேர்ந்து உணவருந்திவிட்டு, வெளியே வந்து பார்த்த செந்தில்குமார் அதிர்ந்துபோனார். காரணம், அவரது இனோவா காரின் பின்சீட்டு பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், காருக்குள் இருந்த பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைத் திருடிச் சென்றுவிட்டனர்.

Vikatan

இதனால், பதறிப்போன செந்தில்குமார் கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார், இனோவா காரின் கண்ணாடியை உடைத்து, பணம் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதேபோல் நேற்று இரவு கரூர் கபிலா கண்ணன் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இன்னோவா கார்
இன்னோவா கார்

தொடர்ந்து, இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதால், பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்க அஞ்சுகின்றனர்.

`பொதுமக்கள் தங்களது கார்களில் பணத்தையோ, விலை உயர்ந்த பொருள்களையோ வைக்க வேண்டாம்' என்று காவல்துறை எச்சரித்துள்ளது.