Published:Updated:

உதவி ஆய்வாளர் மீது மோதிய டிராக்டர்! -மணல் கடத்தலில் கரூரை மிரட்டும் ஆளும்கட்சி #TamilnaduCrimeDiary

பாலவிடுதி காவல்நிலையம்
பாலவிடுதி காவல்நிலையம்

கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. #TamilnaduCrimeDiary

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, பாலவிடுதி. இந்தக் கிராமத்துக்கு அருகிலுள்ள வினோபாஜிபுரம் பகுதியில் சிலர், இரவு நேரங்களில் சிலர் டிராக்டரில் மணல் கடத்துவதாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், பாலவிடுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்த முயன்றுள்ளார்.

பாலவிடுதி காவல்நிலையம்
பாலவிடுதி காவல்நிலையம்

ஆனால், டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை. மாறாக, உதவி ஆய்வாளர்மீது கொலைசெய்யும் நோக்கத்தில் ஏற்றிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், அவரது பைக் சேதமடைந்தது. அதோடு, டிராக்டர் மோதியதால் பலத்த காயமடைந்த தங்கவேலை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் தங்கவேல் அளித்த புகாரின் பேரில், பாலவிடுதி காவல் நிலைய போலீஸார், டிராக்டரை ஓட்டி வந்த சென்னப்பட்டி அஜய், டிராக்டர் உரிமையாளர் நாகப்பன், டிப்பர் லாரி ஓட்டுநர் செந்தில், அதன் உரிமையாளர் செல்வம் உள்ளிட்ட நால்வர்மீது வழக்குப்பதிந்து, 4 பேரையும் தேடி வருகின்றனர். ஆனால், மணலைக் கடத்தியவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைக் காப்பாற்ற அமைச்சர் தரப்பில் முயல்வதாகவும் உதவி ஆய்வாளர் தரப்பில் சொல்கிறார்கள்.

தங்கவேலின் பைக்
தங்கவேலின் பைக்

`ஆளும்கட்சி கொடுக்கும் அழுத்தத்துக்குக் கட்டுப்பட்டு, உதவி ஆய்வாளரைக் கொலைசெய்யும் நோக்கில் டிராக்டரை ஏற்றித் தாக்கிய நால்வரை இன்னும் பாலவிடுதி காவல்நிலைய போலீஸார் கைதுசெய்யவில்லை' என்று கரூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு