Published:Updated:

கரூர்: `3,576 மது பாட்டில்கள்; 29 பேர் கைது!' - ஊரடங்கில் காவல்துறையின் அதிரடி

கைபற்றப்பட்ட மது பாட்டில்கள்
கைபற்றப்பட்ட மது பாட்டில்கள்

மாவட்டம் முழுக்க நடத்தப்பட்ட வேட்டையில், 29 நபர்கள் சிக்கினர். 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 3,576 மது பாட்டில்களைக் கைப்பற்றினர். வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனை மூலம் 26 வழக்குகள் பதியப்பட்டன.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டம் முழுக்க நடைபெற்ற மதுவிலக்கு வேட்டையில், 29 பேர்களைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 3,576 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள்
கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள்
கரூர்: முழு ஊரடங்கு; சுவரில் துளையிட்டு 142 மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக்கில் கைவரிசை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தமிழக அரசு திங்கள் (10-ம் தேதி) கிழமை முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அதோடு, திங்கள் முதல் தமிழகம் முழுக்க இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பதறிப்போன குடிமகன்கள், 14 நாள்களுக்குத் தேவையான மதுவை வாங்கி, மூட்டை கட்டிக்கொண்டுபோன காட்சிகள் அரங்கேறின. அதோடு, பலரும் மது பாட்டில்களை வாங்கி, பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்த வகையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், கரூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, கரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. கரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், கரூர் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சசிதர் ஆகியோர் கண்காணிப்பில், மாவட்டம் முழுக்க அதிரடி சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. அரசு அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கிவைத்து, 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பலர் முயன்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

அப்படி, மதுப்பாட்டில்களை வாங்கி, அவற்றைக் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்டம் முழுக்க நடத்தப்பட்ட வேட்டையில், 29 நபர்கள் சிக்கினர். ஆறு கார்கள், நான்கு இருசக்கர வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 3,576 மது பாட்டில்களைக் கைப்பற்றினர். வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இந்தச் சோதனை மூலம் கரூர் மாவட்டம் முழுக்க மதுபாட்டில்களைக் கடத்தியது சம்பந்தமாக 26 வழக்குகள் பதியப்பட்டன. இறுதியாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், "இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வழக்குகள் போடப்படும்; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு