Published:Updated:

மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி கடத்தல்; மர்ம நபர்களால் கடும் தாக்குதல் - களேபரமாகும் கரூர் அரசியல்

தாக்கப்பட்ட சிவராஜ் ( நா.ராஜமுருகன் )

அடுத்தடுத்து கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் என்று தொடர்ந்து அரங்கேறும் சம்பவங்களால், கரூர் அரசியல் களம் சூடாகிக்கிடக்கிறது. அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி கடத்தப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி கடத்தல்; மர்ம நபர்களால் கடும் தாக்குதல் - களேபரமாகும் கரூர் அரசியல்

அடுத்தடுத்து கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் என்று தொடர்ந்து அரங்கேறும் சம்பவங்களால், கரூர் அரசியல் களம் சூடாகிக்கிடக்கிறது. அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி கடத்தப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
தாக்கப்பட்ட சிவராஜ் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான திருவிக நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டார். கரூர் தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என்னை எட்டு பேர் சேர்ந்து கடத்தினர். அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் பெயரைத் தெரிவித்தனர். அதோடு, அவர்களில் இருவரின் பைகளில் ஸ்டாலின் படம் இருந்தது" என்று பேட்டியளித்தார்.

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து, திண்டுக்கல் மாவட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், கரூரை அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, கரூர் - கோவை நெடுஞ்சாலையிலுள்ள முனியப்பன் கோயில் பகுதியில் அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு, அ.தி.மு.க-வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாருக்கும், அ.தி.மு.க-வினருக்கும் இடையில் தள்ளு முள்ளு
போலீஸாருக்கும், அ.தி.மு.க-வினருக்கும் இடையில் தள்ளு முள்ளு
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், கடத்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி சிவராஜ் ஒரு மணி நேரத்துக்குள் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சுக்காலியூர் காட்டுப்பகுதியில் போலீஸார் மற்றும் அ.தி.மு.க-வினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இதற்கிடையில், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினருக்கும், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது.

அதைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகியைக் கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என, அ.தி.மு.க-வினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், 'கடத்திய நபர்கள் மீது நாளை காலைக்குள் வழக்கு பதியவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று அ.தி.மு.க-வினர் எச்சரித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலால் காயம்பட்ட சிவராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சிவராஜின் சகோதரி கவிதா, "நேத்து கலெக்டர் ஆபிஸ்ல நடந்த தேர்தலையொட்டி, என் தம்பியைக் கடத்தியிருக்காங்க. அங்கேயே தி.மு.க-வினர், 'உன்னைய பார்த்துக்குறோம்டா'னு சொல்லியிருக்காங்க. ஃபேஸ்புக்குல பதிவு போடக் கூடாதுனு மிரட்டியிருக்காங்க. அதனால, இன்னைக்கு வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்புகிட்ட நம்பர் பிளேட் இல்லாத கார்ல வந்து அவனை இடித்து தள்ளி, அவன் கழுத்துல பெரிய அரிவாளைவெச்சு மிரட்டி, கடத்தியிருக்காங்க. காரிலேயே வெச்சு, அவனை அடிச்சுருக்காங்க. கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல பிரியாணிக்கடை வெச்சுருக்குற குமார்ங்கிறவர்தான், சிவராஜைக் கடத்தியிருக்கார்.

கவிதா (சிவராஜ் சகோதரி)
கவிதா (சிவராஜ் சகோதரி)
நா.ராஜமுருகன்

நேத்தும் குமார்தான் என் தம்பியை மிரட்டியிருக்கிறார். குமாரோட சேர்ந்து ஆறு பேர்கொண்ட கும்பல்தான் என் தம்பியைக் கடத்தி, இப்படிக் கொடூரமாகத் தாக்கியிருக்கு. மூஞ்சியிலெல்லாம் பயங்கர அடி. எலும்புல அடி. ஸ்கேன் பண்ண கொண்டுட்டுப் போயிருக்காங்க. உதட்டுலயும் நல்ல அடி. அவனைக் கடத்தினதும், எங்களுக்கு போன் பண்ணி, அவங்க எல்லாரும் நக்கலாகச் சிரிச்சாங்க. அரசியல் காரணமாகத்தான் சிவராஜை இப்படிக் கடத்தித் தாக்கியிருக்காங்க. ஏற்கெனவே, அவன்மேல பொய் கேஸ் போட்டாங்க. அந்த கேஸ்ல 20 நாள் உள்ளே இருந்துட்டு, இப்பதான் வந்தான். நேத்து ஒருத்தரைக் கடத்தியிருக்காங்க. இப்போ, இன்னைக்கு என் தம்பியைக் கடத்தியிருக்காங்க" என்றார். இந்தச் சம்பவங்களால் கரூர் மாவட்ட அரசியல் பரபரத்துக் கிடக்கிறது!