Published:Updated:

`ஊரடங்கு முடியறதுக்குள்ள அள்ளிக் குவிக்கணும்!' -கரூரை கதிகலக்கும் மணல் கடத்தல்

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

சிறு ஆறுகள் மற்றும் ஓடைகளில்தான், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள், ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர்கள் மூலம், மணல் கடத்துவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைப் பகுதிகள், அதையொட்டிய சிறு சிறு ஆறுகளில் மணல் கடத்தல், ஆளுங்கட்சி மற்றும் அரசியல் புள்ளிகளால் தங்குதடையில்லாமல் நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குமுறிவருகிறார்கள். கொரோனாவையொட்டி ஊரடங்கு அமலில் உள்ளதால், அதைப் பயன்படுத்தி, கணக்கில்லாமல் மணலைக் கடத்திவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

கரூர் மாவட்டம் கடவூரைச் சுற்றி, 34 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 34 கிராமங்களைச் சுற்றியும், இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. வெளியிலிருந்து இந்தக் கிராமங்களுக்கு வந்துபோக மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன.

`100 ஆண்டுகளைக் கடந்த 15 புளிய மரங்கள்!' - கரூரில் விதிகளை மீறி வெட்டிச் சாய்த்த அதிகாரிகள்?

இந்தக் கிராமங்கள் அனைத்தும் வறட்சியானவை. இங்குள்ள மலைகளில் எப்போதாவது பெய்யும் மழைநீர், இங்குள்ள சிறு ஆறுகள், ஓடைகள் மற்றும் காட்டாறுகள் மூலமாக இங்குள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்கு நிலத்தடி நீருக்கு வழிவகை செய்கிறது.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

இப்படி இருக்கும் அந்தச் சிறு ஆறுகள் மற்றும் ஓடைகளில்தான், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர்கள் மூலம், இரவும் பகலும் நான்ஸ்டாப்பாக மணல் கடத்துவதாக, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இடையப்பட்டி கீழ்பகுதியில் உள்ள பொன்னணியாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டார ஆற்று ஓடைப் பகுதிகளில் உள்ள ஆற்று மணலைத் தினந்தோறும் இரவு நேரங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர், ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம், இடையப்பட்டி வருவாய் அதிகாரி துணையுடன் மணல் கடத்தல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய கடவூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், " இந்தப் பகுதியே மிகவும் வறட்சியான பகுதி. இங்கு எப்போதாவதுதான் மழை பெய்யும். அந்த நீரை கிராமங்களுக்குச் கொண்டுவந்து சேர்க்கும் சிறு ஆறுகள், ஓடைகளில்தான் ஆளுங்கட்சியினரும் தி.மு.க பிரமுகர்களும் தங்குதடையில்லாம மணல் கடத்தலில் ஈடுபடறாங்க.

இடையப்பட்டி பொன்னணியாறு அணைப் பகுதியிலிருந்து வரும் ஆற்றுப்படுகையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 50 நாள்களிலும் தொடர்ச்சியாக மணல் கடத்தல் நடைபெற்றது. இது குறித்து, கடவூர் தாசில்தார் மைதிலியிடம் தொடர்ச்சியாகப் புகார் கொடுத்தோம். ஆனா நடவடிக்கை எடுக்கலை. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர், மணல் கடத்தும் பிரமுகர்களுக்குத் துணையாக இருக்காங்க. அதனால், அரசியல் பிரமுகர்கள் இங்குள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்துவதை, யாராலும் தடுக்க முடியவில்லை.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

இப்படியே போனால், இங்குள்ள ஆற்றுப்படுகைகள் ஒன்றிலும் கைப்பிடி அளவுக்குக்கூட மணல் இருக்காது. மணல் அள்ளும் அரசியல் புள்ளிகள், 'ஊரடங்கு முடியுறதுக்குள்ள மணலை அள்ளி குவிச்சுக்கிட்டாதான் உண்டு' என்று சொல்லிக்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்க பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்குக் கடிவாளம் போடணும். இல்லைன்னா, இங்குள்ள நீர்நிலைகளை யாராலும் காப்பாற்ற முடியாது. அதேபோல், இதனால் அந்த கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் சரிந்து கடும் வறட்சி ஏற்படலாம். ஏற்கெனவே, இங்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் மணல் கடத்தலை, காவல் துறையும் வருவாய் துறையும் இணைந்து தடுக்க வேண்டும்" என்றார்கள்.

கொரோனா காலம் என்பதால் எங்களால் மணல் கடத்தலைத் தடுக்க முடியவில்லை. ஏற்கெனவே, இதுகுறித்து புகார் வந்தபோது போய் பார்த்தோம். ஆனால், அப்போது மணல் அள்ளுபவர்கள் அங்கே இருப்பதில்லை.
தாசில்தார் மைதிலி

இதுகுறித்து, கடவூர் தாசில்தார் மைதிலியிடம் பேசினோம். "கொரோனா காலம் என்பதால் எங்களால் மணல் கடத்தலைத் தடுக்க முடியவில்லை. ஏற்கெனவே, இதுகுறித்து புகார் வந்தபோது போய் பார்த்தோம். ஆனால், அப்போது மணல் அள்ளுபவர்கள் அங்கே இருப்பதில்லை. மணல் அள்ளாத அளவுக்கு ஆற்றுப்படுகைகளில் ஜே.சி.பி-யால் நாங்க வெட்டிவிட்டும் பலனில்லை. நேற்று தகவல் வந்தபோது, அந்தப் பகுதி வி.ஏ.ஓ போய் பார்த்திருக்கிறார். சிலர் மணல் அள்ளியிருக்கிறார்கள். ஆனால், வி.ஏ.ஓ-வை மிரட்டும்விதமாக, சுற்றி நின்று பயமுறுத்தியிருக்கிறார்கள்.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

வண்டி சாவியை வி.ஏ.ஓ பிடுங்கியதால், மணலைக் கொட்டிவிட்டு, வாகனங்களை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அங்குள்ள அரசியல்வாதிகள் மணலை அள்ளி, அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இருந்தாலும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும், காவல்துறையோடு இணைந்து அதிரடியாகச் செயல்பட்டு, இங்கு மணல் கடத்தல் நடப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு