Published:Updated:

`பணி ஓய்வுபெற இருந்தநாளில் மர்மமாக இறந்த மகன்!' - கரூர் ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

ஆல்வின்
ஆல்வின்

ஆல்வினின் தந்தை அடைக்கலராஜ், இந்திய ராணுவத்தில் பணியாற்றி நேற்றோடு பணி ஓய்வு பெற்று வீடு திரும்ப இருந்த நிலையில், அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர், மாணவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆல்வின்
ஆல்வின்

அதுவும் அந்த மாணவன் இறந்த நாளில்தான், அவரது தந்தை ராணுவத்தில் ஓய்வுபெற்றார் என்பதால், மாணவரின் இழப்பு அந்தக் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.

`மகன் இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை!'- கரூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்தவர், அடைக்கலராஜ். இவர், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, அமலா. இவர், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆல்வின் என்ற மகன் உள்ளார். இவர், கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பரணி பார்க் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பள்ளிக்குச் சொந்தமான ஹாஸ்டலில் நேற்று மாலை ஆல்வின் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளித் தரப்பில் சொல்லப்பட, அவரது உறவினர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஆல்வினின் தந்தை அடைக்கலராஜ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி நேற்றோடு பணி ஓய்வு பெற்று வீடு திரும்ப இருந்த நிலையில், அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆல்வின் சடலமாக
ஆல்வின் சடலமாக
நா.ராஜமுருகன்

பள்ளித் தரப்பில், `ஹாஸ்டலில் தங்கி இருந்து படித்த ஆல்வின் வீட்டுக்குப் போக வேண்டும் என அடம் பிடித்தான். ஏற்கெனவே இரண்டு தேர்வுகள் முடிந்து, நாளைக்கு (4 ம் தேதி) அறிவியல் தேர்வு நடக்க இருக்கு. அதனால், வார்டன், `தேர்வு முடிஞ்சு போகலாம்னு சொல்லியிருக்கிறார். ஆனால் ஆல்வினோ, 'நான் இன்னைக்கே போகணும்'னு அடம்பிடிச்சிருக்கிறான். அதனால், அவரது தாய்க்கு போன் பண்ணிச் சொல்லியிருக்கிறார், வார்டன். ஆனால், அவங்க அம்மாவும், `அங்கேயே இரு. தேர்வுகள் முடிஞ்சு வரலாம். இல்லைன்னா, உன்னை வந்து நான் பார்க்கிறேன்'னு சொல்லியிருக்கிறார். ஆனால், சொன்னபடி அவர் வரவில்லை. அதனால், யாரும் இல்லாத நேரத்துல தூக்குப் போட்டுக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்" என்றார்கள்.

`வளையாத மின் விசிறி... அந்த ரத்தம்..!' கோவை மாணவன் சாவில் பள்ளி மீது சந்தேகம் எழுப்பும் பெற்றோர்

ஆல்வின் வீட்டுத் தரப்பில் இதைப்பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால், இதுகுறித்து விவரமறிந்த சிலர்,``அந்த அறையில் மூணு மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். துண்டைக் கழுத்தில் போட்டு இறுக்கி விளையாடி இருக்கிறார்கள். அதுல ஏதோ ஆகி, ஆல்வின் இறந்திருக்கணும். இல்லைன்னா, இரண்டு மாணவர்களை வச்சுக்கிட்டா, ஆல்வின் தற்கொலை பண்ணியிருப்பான்?. பள்ளி பேர் கெடக் கூடாது என்பதற்காக, மாவட்ட அளவில் முக்கிய அதிகாரி ஒருவரின் மூலமாக இந்த விவகாரத்தைப் பேசி, சுமுகமாக்கி இருக்கிறது பள்ளி நிர்வாகம். அவங்க பெற்றோரையும் ஆஃப் பண்ணிட்டாங்க" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு