Published:Updated:

கலவரபூமியாகிறதா கரூர்?

கோபாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கோபாலகிருஷ்ணன்

பசுபதி பாண்டியன் இடத்தைப் பிடிக்க போட்டி

கரூரில் வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்த பிரபல ரௌடி கோபாலகிருஷ்ணன், அவரது வயலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வலதுகரமாக இருந்த ஒருவனே இந்தக் கொலையைச் செய்ய உதவியிருப்பதும், அதற்கு தென்மண்டலத்தைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவன் மூளையாக இருந்ததும் கரூர் மக்களை அச்சத்தில் உறையவைத்திருக்கிறது. மேற்கண்ட ரெளடிகளைப் பற்றிய உள்விவரங்களை அறிந்தவர்களோ, “மறைந்த பசுபதி பாண்டியனின் இடத்தைப் பிடிக்கும் போட்டியில்தான், இந்தக் கொலை நடந்திருக்கிறது” என்று பகீர் கிளப்புகிறார்கள்!

பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்
பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் என்ற கோபாலகிருஷ்ணன். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான கோபால், கடந்த வாரம் அதிகாலை அவரது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது, மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், இந்தக் கொலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவனான குமுளி ராஜ்குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலையைச் செய்ய குமுளி ராஜ்குமாருக்கு உதவியதாக ராஜா என்ற ராஜபாண்டியன், வினோத்குமார், சரவணன், சுரேஷ், கார்த்திக், நந்தகுமார், மனோஜ் ஆகிய ஏழு பேரைக் முதலில் கைதுசெய்த போலீஸ், பின்னர் குமுளி ராஜ்குமார், இசக்கி குமார் ஆகிய இருவரையும் கைது செய்தது.

‘‘ஃப்ளெக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளது’’ என்று காவல்துறை சொல்கிறது. ஆனால், ‘‘கரூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோலோச்சுவது யார் என்கிற தொழில் போட்டியின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது’’ என்று இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி நம்மிடம் விவரித்தார்கள் இவர்களின் உள்விவரங்களை அறிந்தவர்கள்...

கலவரபூமியாகிறதா கரூர்?

‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் மணல் குவாரி வைத்திருந்த தொழிலதிபர் ஒருவருக்கு அடியாளாக இருந்தார் கோபால். பிறகு, கள்ளச்சாராயம் காய்ச்சி மணல் லாரிகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு சப்ளை செய்தார். இதில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவருக்கு, ரௌடிகளின் தொடர்பு கிடைத்தது. சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர், வெடிகுண்டு தயாரித்து ரௌடிகளுக்கு சப்ளை செய்தார். ஒருமுறை அப்படி வெடிகுண்டு தயாரித்தபோது, அது வெடித்து அவரின் மூன்று விரல்கள் துண்டாகின. சில வருடங்களுக்கு முன்பு கோபாலின் தாய் இறந்தபோது, பட்டாசுக்கு பதிலாக கரூர் நகரம் முழுவதும் நாட்டு வெடிகுண்டுகளை வெடித்து ரெளடிகள் அட்டகாசம் செய்தார்கள். இந்தச் சம்பவங்களால் கோபால் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2012-ல் பசுபதி பாண்டியன் மறைவுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பிலிருந்த கோபாலுக்கும், குமுளி ராஜ்குமாருக்கும் இடையே திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ‘யார் பெரிய ஆள்?’ என்பதில் பகை ஏற்பட்டது. இதற்கு நடுவே கோபாலுக்கு வலதுகரமாக இருந்த ராஜா, கரூர் மாவட்டத்தில் ரௌடியாக கோலோச்ச நினைத்திருக்கிறார். அதைப் பயன்படுத்திக்கொண்ட குமுளி ராஜ்குமார், ராஜாவை வைத்து இந்தக் கொலையை நடத்தியிருக்கிறார். இதன் மூலம் கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் தங்கள் சமூக மக்களிடம் டான் ஆகப் பார்க்கிறார் குமுளி ராஜ்குமார். அதோடு, பசுபதி பாண்டியனின் இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டியிலும் இந்தக் கொலை நடந்திருக்கிறது. ஆனால், காவல் துறையினரோ, சமீபத்தில் நடைபெற்ற கோபாலின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் போர்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இந்தக் கொலை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றார்கள் விவரமாக.

கோபாலகிருஷ்ணனின் அக்காள் மகன் ராமிடம் பேசினோம். ‘‘கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி குமுளி ராஜ்குமாருக்கு நெல்லை, தூத்துக்குடியில ஏதோ பிரச்னைனு சொல்லி கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் பக்கம் வந்தார். அப்போ, மாமாதான் அவரை எல்லார்கிட்டேயும் அறிமுகப்படுத்தினார். மாமா மூலம் இங்க பிரபலமான குமுளி ராஜ்குமார், மாமா பேரைச் சொல்லியே கட்டப்பஞ்சாயத்து செஞ்சாரு. இதை மாமா கண்டிச்சதால, கடந்த ஒண்ணரை வருஷமா அவங்களுக்குள்ள பேச்சுவார்த்தை இல்லை. இன்னொரு பக்கம், பத்து வருஷமா மாமாவோடு ஒட்டிக்கிட்டிருந்த ராஜா, கஞ்சா விக்க ஆரம்பிச்சான். அதனால, மாமா அவனைக் கன்னத்துல அடிச்சார். அந்தப் பகையை மனசுலவெச்சிருந்த ராஜாவைத் தூண்டிவிட்டு, சமயம் பார்த்து மாமாவைக் கொன்னுட்டாங்க. சமீபத்துல மாமாவோட பிறந்தநாளை எங்க சமூக இளைஞர்கள் திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்கள்ல பெரிய அளவுல ஃப்ளெக்ஸ் பேனர்வெச்சு கொண்டாடுனாங்க. அதுவும் அவங்களுக்குப் பொறாமையாகிடுச்சு...” என்றார்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்
ராஜ்குமார்
ராஜ்குமார்

மேற்கண்ட விவரங்களை எல்லாம் சொல்லி குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதரிடம் பேசினோம். ‘‘கோபால் கொலைக்கு உதவியதாக ஒன்பது பேரைக் கைதுசெய்திருக்கிறோம். பிறந்தநாளுக்கு ஃப்ளெக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. மற்றபடி, நீங்கள் சொல்வது போன்ற வேறெந்தக் காரணமும் இல்லை’’ என்றார்.

`கோபாலைக் கொலை செய்தவர்களை சும்மா விட மாட்டோம்’ என்று அவரின் ஆதரவாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அடுத்து எப்போது வேண்டுமானாலும் விபரீதம் ஏற்படலாம் என்கிற நிலையில், கரூர் மாவட்டம் ரௌடிகளின் கூடாரமாக மாறுவதை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்!