Published:Updated:

கரூர்: `வெடக்கோழியா பார்த்து பிடி!' - விவசாயிக்கு அதிர்ச்சிக் கொடுத்த திருடர்கள்

சுப்புராயன் தோட்டம்
சுப்புராயன் தோட்டம்

கோழிகள் அடைக்கப்பட்ட இடத்தில் ஏதோ சத்தம் கேட்டிருக்கிறது. சுப்புராயன் அந்த சத்தத்தைக் கூர்ந்து கேட்டிருக்கிறார். அப்போது ஒருவர், 'சுப்புராயன் தோட்டத்துக் கோழிகள் நல்லா இருக்கும்னாங்க. நல்ல வெடக்கோழியா பார்த்து பிடி' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறார்.

விவசாயி ஒருவரின் தோட்டத்தில் வளர்த்துவந்த கோழிகளை இரண்டு மர்மநபர்கள் பிடிக்க முயன்றபோது, கோழிகள் சத்தம் போட்டதால், நான்கு கோழிகளை மட்டும் பிடித்துக்கொண்டு, தாங்கள் வந்த டூவீலரை விவசாயி தோட்டத்திலேயே விட்டுச் சென்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பி.வெள்ளாளப்பட்டி
பி.வெள்ளாளப்பட்டி
கரூர்: சைல்டு ஸ்பெஷலிஸ்ட்; தனி மருத்துவமனை! - அதிர்ச்சி கொடுத்த போலி மருத்துவர்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கிறது புலியூர். இந்தக் கிராமத்தையொட்டி இருக்கும் சிறிய ஊர், பி.வெள்ளாளப்பட்டி. விவசாயிகள் அதிகம் வசிக்கும் கிராமம் இது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன். விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அந்தப் பகுதில் தனி தோட்டமும் உள்ளது. அதில், சுப்புராயன் நாட்டுக்கோழிகளை வளர்த்துவருகிறார். தினமும் விவசாய வேலைகளோடு, அந்தக் கோழிகளைப் பராமரிக்கும் பணியியையும் செய்துவருகிறார். அது சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு கூலி ஆள்கள் வைத்திருந்தாலும், கொரோனா ஊரடங்கு காரணத்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால், தனது தோட்டத்தை தானே கவனித்து வந்துள்ளார். அதன்படி, இரவு நேரத்திலும் அங்கேயே தங்கி, தோட்டத்துக்கு காவல் இருந்து வந்துள்ளார்.

சுப்புராயன் தோட்டம்
சுப்புராயன் தோட்டம்

அந்தபவகையில், இரவு 11 மணியளவில் தோட்டத்தில் உள்ள கொட்டகையில் இருந்த கட்டிலில், சுப்புராயன் படுத்திருந்தார். அப்போது, கோழிகள் அடைக்கப்பட்ட இடத்தில் ஏதோ சத்தம் கேட்டிருக்கிறது. சுப்புராயன் அந்த சத்தத்தைக் கூர்ந்து கேட்டிருக்கிறார். அப்போது ஒருவர், 'சுப்புராயன் தோட்டத்துக் கோழிகள் நல்லா இருக்கும்னாங்க. நல்ல வெடக்கோழியா பார்த்து பிடி' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறார்.

அதோடு, அந்த மர்ம நபர்கள் கோழியைப் பிடிக்க முயன்றதால், கோழிகளும், 'கொக்கரக்கோ' என்று கூவ, அந்தச் சத்தத்தைக் கேட்டு சுப்புராயன் எழுந்து ஓடியிருக்கிறார். சுப்புராயன் தங்களை நோக்கி ஓடிவருவதைப் பார்த்த இரண்டு மர்ம நபர்களும், கையில் கிடைத்த கோழிகளைப் பிடித்துக்கொண்டு, தோட்டத்து வேலியைத் தாண்டிக் குதித்து, ஓடி மறைந்திருக்கிறார்கள். கொஞ்சம் தூரம் அவர்களைத் துரத்திச் சென்ற சுப்புராயனால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இதனால், மூச்சிரைக்க தோட்டத்துக்குத் திருபியிருக்கிறார். அப்போது, தோட்டத்து வேலிஓரமாக மறைவில், ஹீரோ ஹோன்டா டியூ வண்டி ஒன்று நிற்பதைப் பார்த்தார்.

 பசுபதிபாளையம் காவல் நிலையம்
பசுபதிபாளையம் காவல் நிலையம்

அது அந்த மர்மநபர்கள் வந்த வண்டி. உள்ளே சென்று கோழிகளை சுப்புராயன் எண்ணிப் பார்த்தார். நான்கு கோழிகளை அந்த இரண்டு மர்மநபர்களும் திருடிச் சென்றதைக் கண்டறிந்தார். உடனே, அந்த மர்மநபர்கள் வந்த வண்டியை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுப்புராயன், தனது தோட்டத்தில் இருந்த கோழிகளைத் திருடிய மர்மநபர்கள் மீது புகார் கொடுத்தார். 'நான்கு கோழிகளைக் காணவில்லை, அதன் மதிப்பு 2,000' என்று சொல்ல, மர்மநபர்கள் மீது வழக்கு பதிவுசெய்து, பசுபதிபாளைய காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கோழிகளைத் திருடிய திருடர்களால், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு