Published:Updated:

விபத்துக்குள்ளான இனோவா கார்; ரூ.15,000 லஞ்சம் கேட்ட தலைமைக் காவலர்!- வசமாக மாட்டிவிட்ட இளைஞர்

அந்த இனோவா கார்
அந்த இனோவா கார் ( நா.ராஜமுருகன் )

விசாரணையின் முடிவில், காவல் நிலையத்தில் பணியாற்றும் வேறு யாருக்கும், அபிஷேக்கிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான தனது இனோவா காரை ரெக்கவரி செய்வதற்காக வந்த இளைஞரிடம் போலீஸார் ரூ.15,000 லஞ்சம் கேட்க, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அவர்களை வசமாக மாட்டிவிட்டு, போலீஸாரை அதிர வைத்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்
வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். சொந்தமாகத் தொழில் செய்யும் இளைஞரான அபிஷேக்கின் இனோவா கார் சில தினங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அபிஷேக்குக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருந்தாலும், கார் விபத்துக்குள்ளானதால், அதுசம்பந்தமாக வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, அபிஷேக்கின் இனோவா காரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 செந்தில் குமார் (தலைமை காவலர்)
செந்தில் குமார் (தலைமை காவலர்)
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், அபிஷேக், கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் இருந்த தனது இனோவா காரை விடுவிக்க முயன்றபோது, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் செந்தில் குமார் ரூ.15,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. `அதைக் கொடுத்தால்தான் இனோவா காரை நீங்கள் எடுத்துக்கொண்டு செல்ல முடியும்' என்று செந்தில் குமார் உறுதியாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தலைமைக் காவலர் கேட்ட பணத்தைக் கொடுக்க விரும்பாத அபிஷேக், தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் வசமாக மாட்டிவிட நினைத்துள்ளார். இதையடுத்து, கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு அபிஷேக் ரகசிய தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், இன்று மதியம் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறைந்திருந்தனர். அபிஷேக் காவல் நிலையத்தில் ரூ.15,000 கொடுத்தபோது, கையும் களவுமாகத் தலைமைக் காவலர் செந்தில்குமாரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பிடித்தனர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்
வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தை பூட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், உள்ளே விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில், காவல் நிலையத்தில் பணியாற்றும் வேறு யாருக்கும், அபிஷேக்கிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான தனது இனோவா காரை மீட்க வந்த அபிஷேக்கிடம், கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் லஞ்சம் கேட்ட விவகாரமும், அதைதொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அதிரடி விசாரணையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு