Published:Updated:

நகைக்காக மூதாட்டி கொலை: காவிரியில் வீசிய பிணம், 19 நாள்கள் கழித்து மீட்பு! - கைதானவர்களின் வீடு சூறை

சங்கிலி என்பவரின் மனைவி சத்யா (38), அண்ணாச்சி அணிந்திருந்த நகையை அபகரித்த திட்டம் போட்டுள்ளார். இதற்காக, 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனோடு சேர்ந்து, நகைக்காக மூதாட்டி அண்ணாச்சியை கழுத்தை நெரித்து கொலைசெய்திருக்கிறார்.

நகைக்காக மூதாட்டி ஒருவரை, அருகில் வசிக்கும் ஒரு பெண்ணும், அவரின் 15 வயது மகனும் சேர்ந்து கொலைசெய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கோபமடைந்த அந்த மூதாட்டியின் உறவினர்கள், கொலைசெய்த பெண்ணின் வீட்டைச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை
குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் வரும் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி, கீழமேடு பகுதியை சேர்ந்தவர் அய்யர். இவருடைய மனைவி அண்ணாச்சி (76).

அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவரின் மனைவி சத்யா (38). இவர் அண்ணாச்சி அணிந்திருந்த நகையை அபகரிக்கத் திட்டம் போட்டிருக்கிறார். இதற்காக, 10-ம் வகுப்பு படிக்கும் தன் மகனோடு சேர்ந்து, நகைக்காக மூதாட்டி அண்ணாச்சியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர், மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கழற்றி, தன் வீட்டில் பதுக்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அம்மாவின் சம்பளப் பணத்தை வாங்கச் சென்ற பள்ளி மாணவி! - பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் தலைமறைவு

அதைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் உதவியோடு, மூதாட்டியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி, காவிரி ஆற்றில் வீசியிருக்கிறார். இதற்கிடையில், கொலையான மூதாட்டியின் உறவினர்கள், குளித்தலை காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட குளித்தலை காவல் நிலைய போலீஸார், அண்ணாச்சியைக் கொன்றது சத்யா என்பதைக் கண்டுபிடித்தனர்.

 காவிரி ஆறு
காவிரி ஆறு

அதனால், அவர்கள் மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர். மேலும், மூதாட்டியின் உடலை 19 நாள்களுக்குப் பிறகு காவிரி ஆற்றிலிருந்து போலீஸார் நேற்று முன்தினம் மீட்டனர். இதனால், மூதாட்டி அண்ணாச்சியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, சத்யா, முருகானந்தம் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். இதில், வீட்டு உபயோகப் பொருள்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து முதலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பழனிவேல் ராஜன், குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில், குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மூதாட்டியை நகைக்காக, 15 வயது மகனுடன் சேர்ந்து பெண் ஒருவர் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு