Published:Updated:

`ஆரம்பத்துல ஆசைப்பட்டாலும் தெளிவாயிட்டேன்!' -கரூர் இளைஞரைப் பதறவைத்த `ஒரிசா பார்டர்’ போன்கால்

`எனக்கு கார் வேண்டாம். அதுக்குரிய பணத்துல, நான் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கழிச்சுட்டு, மீதியை அனுப்புங்க'னு சொன்னேன்.

பரிசாக விழுந்ததாகச் சொல்லப்படும் கார்
பரிசாக விழுந்ததாகச் சொல்லப்படும் கார்

``நாங்கள் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியிலிருந்து பேசுகிறோம். எங்கள் கம்பெனி மூலமாகப் பொருள் வாங்கியிருக்கிறீர்கள். குலுக்கல் முறையில் உங்களுக்கு மஹிந்திரா XUV 500 கார் பரிசு விழுந்திருக்கு. வரியா ரூ.13,800 ரூபாயை நாங்க சொல்ற அக்கவுன்டுக்குச் செலுத்துங்க" என்று கரூர் மாவட்ட இளைஞருக்கு, ஒரு பெண் போன் செய்ய, அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

 பரிசு சான்றிதழ்
பரிசு சான்றிதழ்

கரூரைச் சேர்ந்தவர், ஜெய்சுந்தர். இவர், பொறியியல் படிப்பு படித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அதோடு, மக்கள் பாதை அமைப்பின், கரூர் நகர ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு போன் செய்த தீபிகா என்ற பெண்தான், ஜெய்சுந்தருக்குத் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியில் குலுக்கல் அடிப்படையில் கார் விழுந்திருப்பதாகவும், வரிகட்டினால் உடனே ரூ.12,80,000 மதிப்புள்ள அந்த காரையோ அல்லது அந்தப் பணத்தையோ பரிசாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் விரித்த வலையில் விழாமல் தெளிவாக இந்த விவகாரத்தை அணுகிய ஜெய்சுந்தர், இதுபோல் யாரும் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தப் பயன்படுத்திக் கொண்டார்.

Vikatan

நம்மிடம் பேசிய ஜெய்சுந்தர், ``சில தினங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு செல் நம்பரிலிருந்து கால் வந்துச்சு. தீபிகா என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அந்தப் பெண், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியின் பரிசுப் பிரிவிலிருந்து பேசுவதாகச் சொன்னார். `நீங்கள் எங்கள் கம்பெனியில் பொருள் வாங்கியிருக்கிறீர்கள். கம்பெனி முன்னேற்றத்துக்காக, எங்க வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, பரிசு வழங்குகிறோம். அந்த வகையில், உங்களுக்கு ரூ.12,80,000 மதிப்புள்ள மஹிந்திரா கம்பெனியைச் சேர்ந்த XUV 500 கார் பரிசா கிடைச்சுருக்கு. அதற்கு, நீங்கள் ரூ.13,800 ரூபாயை வரியா கட்டணும். நாங்க சொல்ற அக்கவுன்ட் நம்பருக்கு அதைக் கட்டினா, உடனே காரோ அல்லது அதற்குரிய பணமோ உங்களுக்கு வந்துசேரும்'னு சொன்னாங்க. நல்ல வண்டியே இல்லாத எனக்கு, அந்தப் பெண்ணின் வார்த்தைகள் முதல்ல ஆசையை ஏற்படுத்தியது.

ஜெய்சுந்தர்
ஜெய்சுந்தர்

`கூடுதல் தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன். பார்த்துவிட்டுப் பேசுங்கள்' என்று சொன்னார். சொன்னபடியே அனுப்பி வைத்தார். ஆனால், எனக்கு சந்தேகம் வந்து, குறிப்பிட்ட ஆன்லைன் கம்பெனி தரப்பில் விசாரித்தபோது, `அப்படி ஒரு ஆஃபர் நாங்க போடலை. மோசடித்தனம். அதை நம்பாதீங்க'னு சொன்னாங்க. இதனால், தெளிவான நான், மறுபடியும் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து, 'எங்கிருந்து பேசுறீங்க'னு கேட்டேன். அதுக்கு அந்தப் பெண், `நான் ஒரிசா பார்டரிலிருந்து கால் பண்றேன். தமிழ்ப் பிரிவு ஊழியர்'னு சொன்னாங்க.

`அப்படியொரு ஆஃபர் கொடுக்கலைனு நிறுவன ஊழியர்கள் சொல்றாங்களே'னு சொன்னேன். அதுக்கு அந்தப் பெண், `இது பரிசுப் பிரிவு. விற்பனைப் பிரிவுல உள்ளவங்களுக்கு இதைப்பத்தி தெரியாது'னு சொன்னாங்க. தொடர்ந்து நான், `எனக்கு கார் வேண்டாம். அதுக்குரிய பணத்துல, நான் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கழிச்சுட்டு, மீதியை அனுப்புங்க'னு சொன்னேன். அதுக்கு அந்தப் பெண், `அப்படிச் செய்ய முடியாது. வரியைச் செலுத்தினா, உடனே உங்க பேமண்ட் உங்களுக்கு வரும்'னு சொன்னாங்க. 'இது ஏமாத்து வேலையா தெரியுதே. உண்மையில் அந்த நிறுவனத்திலிருந்துதான், பேசுறீங்களா?'னு அதட்டிக் கேட்டேன். 'வாய்ஸ் பிரேக் ஆகுது. நான் கட் பண்ணிட்டுப் பேசுறேன்'னு போனை கட் பண்ணிட்டார். அதன்பிறகு, அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப்லேயே இருக்கு. இது ஏமாற்றுவேலை. நான் ஆரம்பத்துல ஆசைப்பட்டாலும், பின்பு தெளிவாயிட்டேன். ஆனால், இதை நம்பி யாரும் ஏமாறக்கூடாது, இது ஒரு விழிப்புணர்வா இருக்கட்டும்னு உங்ககிட்ட சொல்லுறேன்" என்றார்.

ஜெய்சுந்தருக்கு வந்த வாட்ஸ் அப் தகவல்
ஜெய்சுந்தருக்கு வந்த வாட்ஸ் அப் தகவல்

ஜெய்சுந்தருக்கு அந்தப் பெண் போன் செய்த நம்பருக்கு நாமும் பலமுறை தொடர்புகொண்டோம். ஸ்விட்ச் ஆஃப்லேயே இருந்தது. தொடர்ந்து போன் செய்தோம். ஒருவழியாக அந்த போன் ரிங்கானது. ஆனால், பலமுறை முயன்றும். போனை யாரும் எடுத்து பேசவேயில்லை.